Advertisment

மூன்று மந்திரங்களில் முதல் மந்திரத்தில் மட்டும்தான் பாதி கிணறு தாண்டியிருக்கிறோம்: ராமதாஸ் 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் போதித்த மூன்று மந்திரங்களில் முதல் மந்திரத்தை செயல்படுத்துவதில் மட்டும்தான் பாதி கிணறு தாண்டியிருக்கிறோம். கரோனா ஆபத்து விலகவில்லை, சோதனைகளை அதிகரிப்பதே தீர்வு என கூறியுள்ளார்.

Advertisment

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு ஆணை எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் வேகம் குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் கரோனா ஆபத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபடவில்லை என்ற உண்மையை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் கரோனா தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்த வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

Advertisment

ramadoss

கரோனா வைரஸ் பரவலைதடுப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் போதித்த மூன்று மந்திரங்கள் ‘‘தனிமைப்படுத்துங்கள், சோதனை செய்யுங்கள், தொடர்புடையவர்களை கண்டுபிடியுங்கள்’’ என்பவைதான். இந்த மூன்று மந்திரங்களில் முதல் மந்திரத்தை செயல்படுத்துவதில் மட்டும்தான் பாதி கிணறு தாண்டியிருக்கிறோம். மக்களை ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளாமல் தனிமைப்படுத்தி வைத்து, அதன் மூலம் கரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், இதை மட்டுமே வைத்துக் கொண்டு கரோனாவை ஒழித்து விட்டதாக நிம்மதியடைய முடியாது.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு என்பது பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுதான். இது நோய்ப்பரவலை தடுத்திருக்கிறது என்றாலும் கூட கரோனா வைரஸ் நோயை முற்றிலுமாக ஒழித்துவிடவில்லை. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 738 பேர் உட்பட இந்தியா முழுவதும் 5610 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நோய்ப்பரவல் பல மடங்கு குறைவாகும். இது தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவுக்கு நடந்த நன்மையாகும்.

nakkheeran app

மற்றபடி, கரோனா பரவல் ஆபத்து அப்படியே தான் உள்ளது. காட்டாற்றை அணை போட்டு தடுத்து வைப்பதும், எரிமலையின் வாயை மூடி வைப்பதும் எப்படியோ, அது போன்றது தான் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதும் ஆகும். அணையை திறந்து விட்டால் எத்தகைய அழிவு ஏற்படுமோ, எரிமலை வாய் திறந்தால் எத்தகைய பேரழிவு ஏற்படுமோ, அதை விட மோசமான பேரழிவு கரோனாவை ஒழிக்காமல் ஊரடங்கை விலக்கினால் ஏற்படும். கரோனாவை கட்டுப்படுத்தி விட்டு, ஊரடங்கை விலக்கினால் மட்டும் தான் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அதுதான் முழுமையான வெற்றியாக இருக்கும்.

கரோனா வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தான் நாம் இதுவரை மேற்கொண்டிருக்கிறோமே தவிர, வைரஸைஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இன்று வரை நாம் தொடங்கவில்லை. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அரசால் கூறப்படும் எண்ணிக்கையைவிட, அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலர் மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே வராமல் நடமாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள்தான் கரோனா வைரஸைபரப்புபவர்கள். அத்தகைய தன்மை கொண்டவர்களை கண்டுபிடித்து, சோதனை செய்து குணப்படுத்துவதுடன், அவர்களிடமிருந்து நோயைப் பெற்றவர்களையும் அதே நடைமுறைகளுக்கு உள்ளாக்கும்போதுதான் நோய் கட்டுப்படுத்தப்படும்.

அதற்காக உலக சுகாதார நிறுவனம் போதித்த கடைசி இரு மந்திரங்களான சோதனை செய்யுங்கள், தொடர்புடையோரை கண்டுபிடியுங்கள் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் கரோனா ஆய்வுகளை மேற்கொள்ளும் போதுதான் கரோனா கிருமிகளுடன் இருப்போரை அடையாளம் கண்டு குணப்படுத்த முடியும். தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி 70 நாட்களாகி விட்டன. ஆனால், நேற்று வரை 6095 சோதனைகள் மட்டும்தான் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 87 சோதனைகள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுத் தரப்பிலும், தனியார் தரப்பிலும் சேர்த்து 20 கரோனா ஆய்வு மையங்கள் உள்ளன. அவற்றில் ஒரு மையத்திற்கு, ஒரு நாளைக்கு சராசரியாக 4.40 சோதனைகள் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளன. இது போதுமான எண்ணிக்கை அல்ல.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு ஒரு லட்சம் சோதனைக் கருவிகள் மட்டும்தான் கிடைத்தன. ஆனால், இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு 10 லட்சம் பி.சி.ஆர் சோதனைக் கருவிகளை வாங்கியுள்ளது. தமிழகத்திலுள்ள 20 சோதனை மையங்களில் ஒரு நாளைக்கு ஒரு பணி வேளை மட்டும் பணியாற்றினால் 1300 மாதிரிகளையும், இரு பணி வேளைகள் பணியாற்றினால் 2,500 மாதிரிகளையும் ஆய்வு செய்ய முடியும். தமிழகத்திற்கு மட்டும் குறைந்தது ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் கிடைக்கக்கூடும் என்பதால் தொண்டைச்சளி ஆய்வுகளை அதிகரிக்கலாம்.

இவை தவிர இரத்த மாதிரி சோதனைக்கான ஒரு லட்சம் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. அவை நாளைக்குள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கரோனா நோய் பரவல் அதிகமுள்ள பகுதிகள் எவை, எவை என்பதும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில், தமிழகத்தில் கரோனா ஆய்வுகளை இப்போது இருப்பதை விட குறைந்தது 10 மடங்காவது அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கரோனா அறிகுறி உள்ள அனைவரையும் சோதனைக்கு உள்ளாக்கி, தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும்.

எனவே, தமிழ்நாட்டில் கரோனா சோதனைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நீட்டிக்கப்படவிருக்கும் ஊரடங்கு முடிவடைவதற்குள் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி, கரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மாற்றிவிட முடியும்.” இவ்வாறு கூறியுள்ளார்.

corona virus Ramadoss statement
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe