Skip to main content

மூன்று மந்திரங்களில் முதல் மந்திரத்தில் மட்டும்தான் பாதி கிணறு தாண்டியிருக்கிறோம்: ராமதாஸ் 

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் போதித்த மூன்று மந்திரங்களில் முதல் மந்திரத்தை செயல்படுத்துவதில் மட்டும்தான் பாதி கிணறு தாண்டியிருக்கிறோம். கரோனா ஆபத்து விலகவில்லை, சோதனைகளை அதிகரிப்பதே தீர்வு என கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு ஆணை எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் வேகம் குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் கரோனா ஆபத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபடவில்லை என்ற உண்மையை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் கரோனா தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்த வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

 

ramadoss



கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் போதித்த மூன்று மந்திரங்கள் ‘‘தனிமைப்படுத்துங்கள், சோதனை செய்யுங்கள், தொடர்புடையவர்களை கண்டுபிடியுங்கள்’’ என்பவைதான். இந்த மூன்று மந்திரங்களில் முதல் மந்திரத்தை செயல்படுத்துவதில் மட்டும்தான் பாதி கிணறு தாண்டியிருக்கிறோம். மக்களை ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளாமல் தனிமைப்படுத்தி வைத்து, அதன் மூலம் கரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், இதை மட்டுமே வைத்துக் கொண்டு கரோனாவை ஒழித்து விட்டதாக நிம்மதியடைய முடியாது.
 

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு என்பது பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுதான். இது நோய்ப்பரவலை தடுத்திருக்கிறது என்றாலும் கூட கரோனா வைரஸ் நோயை முற்றிலுமாக ஒழித்துவிடவில்லை. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில்  738 பேர் உட்பட இந்தியா முழுவதும் 5610 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நோய்ப்பரவல் பல மடங்கு குறைவாகும். இது தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவுக்கு நடந்த நன்மையாகும்.

 

nakkheeran app

மற்றபடி, கரோனா பரவல் ஆபத்து அப்படியே தான் உள்ளது. காட்டாற்றை அணை போட்டு தடுத்து வைப்பதும், எரிமலையின் வாயை மூடி வைப்பதும் எப்படியோ, அது போன்றது தான் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதும் ஆகும். அணையை திறந்து விட்டால் எத்தகைய அழிவு ஏற்படுமோ, எரிமலை வாய் திறந்தால் எத்தகைய பேரழிவு ஏற்படுமோ, அதை விட மோசமான பேரழிவு கரோனாவை ஒழிக்காமல் ஊரடங்கை விலக்கினால் ஏற்படும். கரோனாவை கட்டுப்படுத்தி விட்டு, ஊரடங்கை விலக்கினால் மட்டும் தான் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அதுதான் முழுமையான வெற்றியாக இருக்கும். 

கரோனா வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தான் நாம் இதுவரை மேற்கொண்டிருக்கிறோமே தவிர, வைரஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இன்று வரை நாம் தொடங்கவில்லை. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அரசால் கூறப்படும் எண்ணிக்கையைவிட, அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலர் மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே  வராமல் நடமாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள்தான் கரோனா வைரஸை பரப்புபவர்கள். அத்தகைய தன்மை கொண்டவர்களை கண்டுபிடித்து, சோதனை செய்து குணப்படுத்துவதுடன், அவர்களிடமிருந்து நோயைப் பெற்றவர்களையும் அதே நடைமுறைகளுக்கு உள்ளாக்கும்போதுதான் நோய் கட்டுப்படுத்தப்படும்.
 

அதற்காக உலக சுகாதார நிறுவனம் போதித்த  கடைசி இரு மந்திரங்களான சோதனை செய்யுங்கள், தொடர்புடையோரை கண்டுபிடியுங்கள் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் கரோனா ஆய்வுகளை மேற்கொள்ளும் போதுதான் கரோனா கிருமிகளுடன் இருப்போரை  அடையாளம் கண்டு குணப்படுத்த முடியும். தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி 70 நாட்களாகி விட்டன. ஆனால், நேற்று வரை 6095 சோதனைகள் மட்டும்தான் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 87 சோதனைகள் மட்டும்  செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுத் தரப்பிலும், தனியார் தரப்பிலும் சேர்த்து 20 கரோனா ஆய்வு மையங்கள் உள்ளன. அவற்றில் ஒரு மையத்திற்கு, ஒரு நாளைக்கு சராசரியாக 4.40 சோதனைகள் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளன. இது போதுமான எண்ணிக்கை அல்ல. 

கரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு ஒரு லட்சம் சோதனைக் கருவிகள் மட்டும்தான் கிடைத்தன. ஆனால், இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு 10 லட்சம் பி.சி.ஆர் சோதனைக் கருவிகளை வாங்கியுள்ளது. தமிழகத்திலுள்ள 20 சோதனை மையங்களில் ஒரு நாளைக்கு ஒரு பணி வேளை மட்டும் பணியாற்றினால் 1300 மாதிரிகளையும், இரு பணி வேளைகள் பணியாற்றினால் 2,500 மாதிரிகளையும் ஆய்வு செய்ய முடியும். தமிழகத்திற்கு மட்டும் குறைந்தது ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் கிடைக்கக்கூடும் என்பதால் தொண்டைச்சளி ஆய்வுகளை அதிகரிக்கலாம்.

இவை தவிர இரத்த மாதிரி சோதனைக்கான ஒரு லட்சம் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. அவை நாளைக்குள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கரோனா நோய் பரவல் அதிகமுள்ள பகுதிகள் எவை, எவை என்பதும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில், தமிழகத்தில் கரோனா ஆய்வுகளை இப்போது இருப்பதை விட குறைந்தது 10 மடங்காவது அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கரோனா அறிகுறி உள்ள அனைவரையும் சோதனைக்கு உள்ளாக்கி, தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும்.
 

எனவே, தமிழ்நாட்டில் கரோனா சோதனைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நீட்டிக்கப்படவிருக்கும் ஊரடங்கு முடிவடைவதற்குள் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி, கரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மாற்றிவிட முடியும்.” இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.