
கரோனா என்கிற கொடிய வைரஸ் மனித சமூகத்தின் மீது தனது கொடிய கரங்களைப் பற்றி கொண்டதின் விளைவு எல்லோருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் சீர்குலைந்து சிதறி கிடக்கிறது. அதில் முக்கியக் காரணம் என்னவென்றால் குறிப்பாக பொதுப் போக்குவரத்து முடக்கம் தான். வட மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தமிழக்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரிந்தார்கள். அந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் 80 சதவீதம் பேர் தங்களது சொந்த மாநிலத்திற்கே திரும்பிச் சென்று விட்டனர்.
இப்போதும் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் குடும்ப வறுமையினால் தமிழகத்தில் தங்கியுள்ளார்கள் அப்படியொருவர்தான் இவர். ஒடிசா மாநிலம் பாலன்காட்டியைச் சேர்ந்தவர் ராகசாசந்திரா மகன் அஜய்குமார் நாயக். இருபத்தாறு வயதான இவர் ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
வறுமையின் காரணமாக இங்கிருந்து வேலைசெய்து தனது குடும்பத்திற்குத்தனது உழைப்பின் மூலம் பெற்ற ஊதியத்தை அனுப்பி வந்துள்ளார். ஊரைவிட்டு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டதால் தனது குடும்பத்தார் நினைவுகளுடன் பித்து பிடித்ததுபோல் இருந்துள்ளார். ஊருக்குப்போகலாம் என்றால் ரயில்கிடையாது. ஒரு கட்டத்தில் அஜய்குமார் இனிமேல் ஊரில் உள்ள தனது தாய், தந்தை உறவினர்கள் யாரையும் பார்க்க வாய்ப்பே இல்லை என மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவரது நண்பர்களுடன் கண்ணீர் விட்டு கதறியபடியே ஃபோனில் பேசியபடி இருந்தார். அப்போது, திடீரென ஏதோ முடிவுக்கு வந்த அவர் அவரது ரூமில் பிளேடால் இடது கையைக் கிழித்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். பிறகு அங்குள்ள தோல் தொழிற்சாலை அருகே உள்ள முள்காட்டில் இருந்த வேப்பமரத்தில் தனது துண்டினால் தூக்குப்போட்டு அஜய்குமார் நாயக் தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த சக ஊழியர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஜய்குமார் நாயக்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் புலம் பெயர் தொழிலாளர்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)