Advertisment

கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறினால் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் -நாராயணசாமி பேட்டி!

 narayanasamy

Advertisment

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வியாழக்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "புதுச்சேரி காவல்துறை பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று பரிசோதனை நடைபெற்றதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்ற முடிவு வந்திருக்கிறது. புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவருக்குச்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் பணியாற்றிய மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு நோய்த் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இந்த நோய்த்தொற்றுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும், சமூக இடைவெளியைப் கடைப்பிடிக்கவேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களைவழங்கினார். ஆனால் ஏற்கனவே பல மாநில அரசுகள் வருவாய் இழந்துள்ளது. அதனால் இரண்டு மாத வருவாய் வழங்கிட வேண்டுமென்று கேட்டுள்ளோம். இந்நிலையில் பிரதமர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு 20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் பல சலுகைகள் வழங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசு செலவு போக மீதம் உள்ளவை விவசாயிகள், தொழிலாளர்கள், கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்குவதாக கூறி இருக்கிறார்கள்.

Advertisment

புதுச்சேரியில் நிதி தட்டுப்பாடு இருந்தாலும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் கிராமப்பகுதிகளில் 18,000 பேர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள். சுற்றுலாத்துறை தற்போது முடங்கி உள்ளது. அதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது குறித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நமது அண்டை பகுதிகளான விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் நோய்த் தொற்றுகள் உள்ளது. அதனால் எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. வியாபாரிகள் மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாகக் கடை திறக்க அனுமதி கோரி உள்ளார்கள். அதுகுறித்து விரைவில் அறிவிப்போம். கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருபுறம் நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும், இன்னொரு புறம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கான திட்டங்களையும் நாங்கள் வகுத்து வருகின்றோம். மாநில அரசின் ஒட்டுமொத்தமான செயல்பாடு இந்த நோய்த் தொற்றைத் தடுக்கும் நோக்கிலே உள்ளது.

மூன்றாவது கட்டமாக மாறினால் அது சமூகப் பரவலாக மாறும். சமூகப் பரவலாக மாறினால் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். தொற்று உள்ளவர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் நோய்த்தொற்று அதிகரித்தால் அவர்களைச் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே தற்போது உள்ள நடைமுறையாக உள்ளது. புதுச்சேரியில் தற்போது பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கிறார்கள். இருந்தபோதும் மாலை நேரங்களில் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே நடமாடுகின்றனர். சகஜ நிலைக்கு நாம் மாறினால் கூட மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டும், வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும், விழாக்கள் தவிர்க்கப்படவேண்டும். இது இன்னும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது". இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

corona virus issue Narayanasamy Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe