Skip to main content

கரோனோ வைரஸ் எதிரொலி - மக்கள் திமிர் பிடித்துதான் வெளியே வருகிறார்களா?

வாழ்வா சாவா என்கிற போராட்டத்திற்கு கரோனோ என்கிற வைரஸ் உலக மக்களைத் தள்ளியிருக்கிறது. இதை அடுத்து ஆளும் அரசாங்கத்தின் சார்பில் தனிமைப்படுத்தல், ஊரடங்கு உத்தரவு வெளியிட்டு உள்ள நிலையில் இந்த நெருக்கடி நிலை குறித்து பல வகையினரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வேணாடு ஹிம்லர் என்கிற முகநூல் எழுத்தாளர் பின் வருமாரு பதிவிட்டுள்ளார். 

 

 Corona virus issue - Facebook writer opinion

 மக்கள் திமிர் பிடித்து வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள் அவர்களை லத்தியால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் எல்லோரும் கடுமையான வார்த்தைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் வீட்டை விட்டு வெளியவே வரக்கூடாது என்பது சாத்தியப்பட வேண்டும் என்றால், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி அரசு வழங்கினால் மட்டுமே அது சாத்தியப்படும். அது சாத்தியாமா இல்லையா என்பதைத் தாண்டி அதை மாற்று வழிகள் மூலம் எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்று நினைத்து அதை சாத்தியப்படுத்துவதே சரியான அரசு கையாள வேண்டிய செயல். அதை செய்யாமல் வெறுமனே வெளியே வராதீர்கள் என்று சொல்வது உத்தரவு போடுவது முட்டாள்த் தனமானதாகத் தெரியவில்லையா?? 

குறைந்தபட்சம் அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, காய்கறிகள் வாங்குவதற்காவது அவர்கள் வெளியே வந்து தானே ஆக வேண்டும்? நீங்கள் தானே அந்தக் கடைகளை திறந்து வைக்க அனுமதியும் கொடுத்திருக்கிறீர்கள்? மக்கள் வெளியே வருவார்கள் என்று தெரிந்து தானே அத்தியாவசிய சேவைகளை முடக்காமல் இருக்கிறீர்கள்? வங்கிகளும் திறந்திருக்க அனுமதி வழங்கியிருக்கிறீர்கள், வங்கியில் மக்கள் கூட்டம் கூடுமா கூடாதா? அதுவும் மாத இறுதி வர இருக்கிறது. வீட்டுக் கடன் போன்ற கடன் பெற்றவர்கள், தங்கள் கடனைத் திருப்பி செலுத்த வங்கிக்கு வர வேண்டுமா வேண்டாமா? வங்கிக்கு மக்கள் வந்தால் கூட்டம் கூடுமா கூடாதா? அப்புறம் எப்படி மக்கள் வெளியே வராமல் இருப்பார்கள்?

கோயம்பேட்டில் கூட்டம் கூட்டமாகக் கூடுகிறார்கள் என்றால் கூடின பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு காரணத்தோடு, இல்லை அச்சதோடு தான் கூடியிருப்பார்கள். வெளியூரில் இருந்து வேலை நிமித்தமாக வந்தவர்கள் தங்கியிருந்த விடுதிகளை எல்லாம் மூடக்கூடாது, அவர்களுக்கான விடுதி கட்டணத்தை அரசே செலுத்தும், விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விடுதியில் அரசே கொடுக்கும் என்ற ஒரு உத்தரவையாவது குறைந்தபட்சம் கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் எல்லோரும் இங்கேயே தங்கியிருப்பார்களா என்றால் கட்டாயம் இல்லை. ஆனால் ஓரளவுக்கு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கலாமே. 

கூலித்தொழிலாளிகள், ரோட்டோரங்களில் வியாபரம் செய்பவர்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களின் வாழ்வியல் முறையும் அவர்கள் 100 ரூபாய் சம்பாதித்து ஒரு நாள் தன் குடும்பத்தை வாழ வைக்க அவர்கள் படும் பாடு இருக்கே, அந்த வலி, அது அவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். எதைப்பற்றியுமே யோசிக்காமல் திடீரென யாரும் வெளியே வராதீர்கள் என்று 144 தடை உத்தரவு போட்டால் எப்படி வராமல் இருப்பார்கள்? 1 நாள் 2 நாள் என்றால் கூட தாக்குப்பிடிக்கலாம், நீண்ட நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருங்கள் என்று உத்தரவு போடுவது எளிதானதாக இருக்கலாம். ஆனால் அதில் இருக்கும் களச்சூழலையும் எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். 

எத்தனையோ தனியார் நிறுவனங்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை, வேலையில் இருந்து நீக்கி விடுவோம் என்று மிரட்டல்கள் விடுக்கலாம், வேலையைப் பறிக்க கூடாது என்று அரசு சில உத்தரவு போட்டாலும் ஒவ்வொரு நிறுவனமாக கண்காணித்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்களா இல்லையா என்பதை ஆராய அரசு ஏதாவது திட்டங்கள் வைத்திருக்கிறதா? பாதிக்கப்பட்ட எல்லோரும் அரசிடம் வந்து முறையிட்டால் தான் அவர்களுக்கு சம்பளமும் வேலையும் நீடிக்கும் என்றால் அப்படி முறையிடுவதற்கு பதிலாக நாம் வேலைக்கே சென்று விடுவோம் என்பது தான் மக்களின் நிலைப்பாடாக இருக்கும். அரசு வேலைக்குப் போக வேண்டாம் என்கிறது முதலாளியோ வேலைக்கு வரவில்லை என்றால் வேலையில்லை சம்பளம் இல்லை என்கிறார், சம்பளம் இல்லை என்றால் குடும்பம் பட்டினி கிடந்து சாகுமே என்ற கவலை.

இது எதையுமே மனதில் ஏந்தாமல் மக்கள் வெளியே வருகிறார்கள், மக்களுக்குப் பயம் இல்லை அக்கறை இல்லை என்றெல்லாம் பலரும் மக்களை வசைபாடி வருவது வேடிக்கைக்குரியது. அவரவரர் சூழ்நிலையில் இருந்து யோசித்தால் தான் அது புரியும், மக்களின் சூழ்நிலைகளைப் புரிந்து அதற்கேற்ப மாற்று திட்டங்களைச் செய்ய வேண்டியது தான் அரசின் கடமை. அதை அரசு செய்ய வேண்டும் என்பதே என் போன்றவர்களின் கோரிக்கை. 

இது எதைப்பற்றியுமே பேசாமல் வெளியே வரும் மக்களை லத்தியால் அடிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதெல்லாம் உணர்ச்சிவயப்பட்டு கோபத்தில் வரும் வார்த்தைகள். யதார்த்தத்தை புரிந்து கொண்டு கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். அவர்களை விட அவர்களின் உயிர் மேல் உங்களுக்கு அவ்வளவு அக்கறையா இருந்து விட போகிறது? சாக வேண்டும் என்று நினைத்து யாரும் வெளியே வருவதில்லை, வருவதற்கான நிர்பந்தம் அவர்களுக்கு இருப்பதால் வருகிறார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி பேசுங்கள். சும்மா கூட்டத்தோட கூட்டமா கோவிந்தா போடாதீங்க... ப்ளீஸ்

பி.கு : சிலர் கொழுப்பெடுத்து வெளியே சுற்றித் திரிவார்கள், அவர்களுக்கு நீங்கள் சொல்வது வேண்டுமானால் பொருந்தும், ஆனால் வெகுஜன மக்களின் நிலையோ வேறு.... புரிந்து கொள்ளுங்கள்!

என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். 
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்