Skip to main content

முழு ஊரடங்கை முழுமையாக மதித்து நடப்போம், கரோனாவை வெல்வோம்! ராமதாஸ் அறிக்கை

Published on 18/06/2020 | Edited on 18/06/2020
ramadoss

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இன்று நள்ளிரவு முதல் இம்மாத இறுதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதை வெறுப்பாக கருதாமல் வாய்ப்பாக நினைத்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னையில் நேற்று நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த மே மாதம் இதே நாளில் 7,117 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில் 5 மடங்காக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே சென்னையில் கரோனா வைரஸ் நோய் எந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். கரோனா வைரஸ் நோய் பரவலுக்கு நாம் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மறந்ததுதான் முக்கியக் காரணம்.

அதன் விளைவாகத்தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில், இப்போது அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் நடமாடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், சென்னை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர், அவை மதிக்கப்பட வேண்டும்.

கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு, மாநில அரசுகள் கூறிய அறிவுரைகளை மதிக்கத் தவறினோம். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வெளியில் சென்று திரும்பும்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்ட அறிவுரைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டோம். அதன் விளைவு... எப்போது கரோனா நம்மை தாக்குமோ? என்ற அச்சத்தில் உறைந்து கிடைக்கிறோம். அனைத்துக்கும் காரணம் நமது அறியாமை அல்ல.... அலட்சியம், அலட்சியம்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்றிரவு முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், அதையாவது நாம் மதித்து நடக்க வேண்டும். அதன் மூலம்தான் கரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு மருத்துவம் அளிக்க முடியும். எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களை நான் மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், முழு ஊரடங்கு காலத்தில் வீடுகளை விட்டு வெளியில் வரும் எண்ணத்தையே கைவிடுங்கள். தவிர்க்க முடியாமல் வீடுகளை விட்டு வெளியில் வந்தால், முகக் கவசம் அணிதல், கையுறை அணிதல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும். அதன்மூலம் சென்னையை கரோனா இல்லாத நகரமாக்க உதவ வேண்டும்.

உங்களது குடும்பத்தில் எவருக்கேனும் கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.

அதேபோல், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, சோதனைகளை அதிகரிக்க வேண்டும். 12 நாட்கள் முழு அடைப்பு முடிவதற்குள் கரோனா பாதிப்பு உள்ளவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்தத்தில் இந்த முழு ஊரடங்கு முடியும்போது கரோனா இல்லாத சென்னை மலர வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.