37 நாட்களுக்குப் பின் கரோனா பாதிப்பு... அதிர்ச்சியில் ஈரோடு மக்கள்!!!

corona virus impact in erode

தமிழகத்திலேயே முதல்முறையாக மதபிரச்சாரம் செய்ய வந்த தாய்லாந்து நாட்டினரிடம் இருந்து கரோனா பரவியது ஈரோட்டில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. அதுமட்டுமில்லாமல், தாய்லாந்து நாட்டினரோடு தொடர்பில் இருந்தவர்கள், டெல்லி சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தைசேர்ந்தவர்கள் என மொத்தம் 70 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவர் மற்றும் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட, மீதம் 69 பேரும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர். அதன்பிறகு ஈரோட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்றே ஏற்படவில்லை. மாவட்ட அதிகாரிகளும் ஈரோடு மக்களும் இதனால் பெரும் நிம்மதியடைந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் இன்றைய அறிவிப்பால் கலைந்து போயிருக்கிறது.

கிட்டத்தட்ட 37நாட்களாக கரோனா இல்லாத மாவட்டமாக இருந்த ஈரோட்டில், இன்றைக்கு ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்திருக்கிறது. கரோனா உறுதி செய்யப்பட்ட அந்த நபர் ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடியை சேர்ந்தவர். 50 வயதான இந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் சிக்கியிருக்கிறார். அதில் அவருடைய காலில் பலமாக அடிபட்டிருக்கிறது. அதனையடுத்து மருத்துவமனைகளுக்குச் சென்று காலுக்கு கட்டுப் போட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும், காலில் வலி குறையாமல் இருக்கவே, ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். ஈரோடு மருத்துவர்களோ சேலத்திற்குச் செல்லுங்கள் என ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுத்தபோதுதான், ரத்தப் பரிசோதனையில் அந்த நபருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. அதனையடுத்து மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தியிருக்கின்றனர். மேலும், அவருடைய குடும்பத்தாருக்கும் கரோனா தொற்று இருக்கிறதா என சோதனை செய்திருக்கின்றனர். மேலும், கவுந்தப்பாடியில் அவரது வீட்டைச் சுற்றியுள்ள சுமார் 18 பேரை தனிமைப்படுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர். எப்படியோ, 37 நாட்களாக கரோனா இல்லாத மாவட்டமாக இருந்த ஈரோட்டில், மறுபடியும் கரோனா வந்துவிட்டது. இதனையும் அதிகாரிகள் அடித்து விரட்டுவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

corona virus covid 19 Erode
இதையும் படியுங்கள்
Subscribe