ADVERTISEMENT

தொழில் நிறுவனங்களின் கடன் தவணைக்கு விலக்களிக்க கோரி மனு! -சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை பதிலளிக்க உத்தரவு!

08:45 PM Apr 11, 2020 | Anonymous (not verified)

கரோனா பாதிப்பை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை விலக்கிக் கொள்ளும் வரை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்துவதற்கு விலக்களிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT



கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு, மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டது. இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோழிப்பண்ணை தொழில் நடத்தி வரும் கோவர்த்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், ஊரடங்கு முடியும் வரை, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்துவதற்கு விலக்களிக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ADVERTISEMENT



பிற துறைகளைப் போல, வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியாது என்றும், உற்பத்திக்கு தொழிலாளர்கள் தேவை எனவும், உற்பத்தியான பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இதுகுறித்து 2 வாரங்களில் பதிலளிக்க, ரிசர்வ் வங்கிக்கும், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT