ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பீதி... முட்டை விலை சரிவு... நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் இழப்பு...!

09:58 PM Mar 09, 2020 | Anonymous (not verified)

கேரளாவில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் தொற்றும் ஏற்பட்டுள்ளதாலும், கொரோனா வைரஸ் தொற்றியதாக உலா வரும் வதந்தியாலும் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இரு கோழிப்பண்ணைகளில் 12 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டு உள்ளன. அதனால் தமிழகத்திலும் கோழிப்பண்ணைத் தொழில் கொடிகட்டிப் பறக்கும் நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் பண்ணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கோழிகளை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால் முட்டை, கறிக்கோழி ஆகியவற்றின் விலைகளும் கடந்த ஒரு மாதமாகவே பெரிய அளவில் சரிவடைந்துள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் ஒரு முட்டை தற்போது 2.50 ரூபாய்க்கு விற்பனையாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 3.80 ரூபாய் ஆக உள்ளது. அதாவது, முட்டைக்கு 1.30 ரூபாய் வரை நட்டத்திற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.



கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து கோழி முட்டைகளை அங்கு கொண்டு செல்லவதற்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை சான்றிதழ் பெற்ற முட்டை வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் செல்ல வேண்டும் என்றும் கேரளா அரசு கடும் கெடுபிடிகளைச் செய்து வருகிறது.

இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், ''இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது முட்டை விலை மிகக்கடுமையாக சரிந்துள்ளது. வடமாநிலங்களில் முட்டை விற்பனை குறைந்துவிட்டதால் அதன் தாக்கம் தமிழகம், கேரளா வரை பரவிவிட்டது'' என்றனர்.


இது ஒருபுறம் இருக்க, நாமக்கல்லைச் சேர்ந்த பெரிய பண்ணையாளர்கள் நட்டத்தை ஈடுகட்டும் வகையில், வாகனங்களில் முட்டைகளை எடுத்துச்சென்று நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். முப்பது முட்டைகள் கொண்ட ஒரு அட்டை 90 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். கடைகளில் ஒரு முட்டை சில்லரை விலையில் 3.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உணவக உரிமையாளர்கள், பொதுமக்கள் பண்ணையாளர்களிடம் நேரடியாக முட்டைகளை கொள்முதல் செய்கின்றனர்.

இதற்கிடையே, என்இசிசி சார்பில், குறைந்த விலையில் முட்டை விற்பனை செய்ய நிரந்தர கடைகளைத் திறக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT