corona virus - Erode lockdown - People breathed air of freedom

ஈரோடு மாவட்டத்தில் முதன்முதலாக கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை. இதனைத்தொடர்ந்து கருங்கல்பாளையம், அக்கரகாரம் மற்றும் கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம் என பல ஊர்களுக்கும் இந்த கரோனா வைரஸ் பரவல் நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 70 பேர் இந்த வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.அவர்களில் 69 பேர் பூரண நலம் பெற்று அவரவர் வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். ஒரு முதியவர் மட்டும் ஏற்கனவே இறந்துவிட்டார். ஆக கரோனா வைரஸ் பரவல் ஈரோட்டில் முற்றிலுமாக துடைக்கப்பட்டது.

Advertisment

Advertisment

இந்த வைரஸ் பரவல் தொடங்கிய இடமான கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய இடங்களில் அப்போதே வசிக்கும் பொதுமக்களை ஆரம்ப நிலையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் வசிப்பிடத்தில் இருந்து யாரும் வெளியே வராமல் மாவட்ட நிர்வாகம் தடை செய்தது. இதற்காக அந்த பகுதிகள் முழுக்க தடை ஏற்படுத்தப்பட்டு தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து மக்கள் யாரும் வெளியே வர முடியாதது போல், அந்தப் பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக நேற்று முதல் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்று காலை அந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டது. அங்கு வசிக்கும் மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். நாற்பது நாட்களை கடந்து தங்களது வசிப்பிடத்தில் அடைந்து கிடந்த மக்கள் ஏதோ ஒரு புதிய உலகத்தை பார்ப்பதுபோல் என்று வெளியே வந்து நகரத்தை கண்டுவிட்டு சென்றனர்.

இப்பகுதியில் உள்ள மக்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சில நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியோடு இருக்கவேண்டுமென அம்மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 13 பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று முதல் வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசித்தது போல் மன மகிழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.