ஊரடங்கு அமலில் இருக்கின்ற நாட்களுக்கு மின்சார கட்டணம் வாங்கக்கூடாது. மின்சாரம் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் தாக்கத்தால் அரசாங்கத்தினுடைய உத்தரவின்படி அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன. அனைத்து வியாபாரங்களும் முடக்கப்பட்டு இருக்கின்றன. மொத்ததமிழகமும் வீட்டிற்குள் அடங்கிக் கிடக்கிறது. வருமானம் என்பதே யாருக்கும் கிடையாது. அரசாங்கம் கொடுக்கின்ற மிகக்குறைந்த உதவிகளும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கைந்து நாட்கள் சமாளிப்பதற்குக் கூடத் தேவையான அளவு இல்லை.

Advertisment

E.R.Eswaran

தொழிற்சாலைகளும், வியாபாரங்களும் மூடப்பட்டிருப்பதால் மின்சாரத்திற்கான தேவை இல்லை. சென்ற மாதத்தினுடைய கணக்கீட்டின்படி இந்த மாதக் கட்டணம் வரும் என்று மின்சாரத்துறை சொல்லியிருப்பது பொருத்தமற்றது. ஒவ்வொரு தொழிலகமும் இணைப்பு பெற்றிருக்கின்ற அளவுக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்தவில்லை என்று சொன்னாலும் நிரந்தரதொகை (Fixed Charges) ஒன்று கணக்கிடப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தைப் பொறுத்தவரை அந்தத் தொகையைக் கூட கட்டும் நிலையில் வர்த்தக நிறுவனங்கள் இல்லை. அதனால் ஏப்ரல் மாதத்திற்கு மின்சார கட்டணம் இல்லை என்று மின்சாரத்துறை அறிவிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவினால் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்ற மக்கள் மன அழுத்தம் வராமல் இருக்க பல்வேறு மின்சார உபகரணங்களை உபயோகப்படுத்தி தான் ஆக வேண்டும்.

Advertisment

http://onelink.to/nknapp

வருமானம் இல்லாமல் ஏப்ரல் மாதத்திற்கு மின்கட்டணத்தை யாரும் செலுத்த முடியாது. அனைத்து தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட அனைவருக்கும் மின் கட்டணங்களைக் கட்டுவதற்குக் கால அவகாசம் கொடுத்து மின்சாரத்துறை அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. ஏப்ரல் மாதத்திற்கு மின்கட்டண கணக்கை எடுக்காமல் மார்ச் மாதத்தினுடைய அளவு படியே கட்டலாம் என்று அறிவித்திருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது.

உண்மை நிலையைப் புரிந்துகொண்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கின்ற காலத்திற்கு மின்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது, மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை மின்துறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.