ADVERTISEMENT

கடலூர்: என்.எல்.சியில் 30% ஆட்குறைப்பு! மற்ற பகுதிகளிலிருந்து நெய்வேலி துண்டிப்பு! 

10:17 PM Mar 29, 2020 | rajavel

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிறுவனத்தில் அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு முதல் சுரங்கம், முதலாவது சுரங்க விரிவாக்கம், இரண்டாவது நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றிலிருந்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த பழுப்பு நிலக்கரியை கொண்டு 3 அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


இந்நிலையில் தற்போது வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றாமல் இருப்பதற்காக என்.எல்.சி நிறுவனம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக என்.எல்.சி சுரங்க பகுதிகளில் மேல்மண் நீக்குதல், நிலக்கரி வெட்டி எடுத்தல் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரிகளும் வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான பழுப்பு நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மேல்மண் நீக்குதல் மற்றும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அனல் மின் நிலையங்கள் வழக்கம் போல் இயங்குவதால் மின் உற்பத்தி பாதிக்கப்படாதவாறு சுழற்சி முறையில் தற்போது விடுப்பு அளிக்கப்பட்டுள்ள 30 பணியாளர்கள் பணிக்கு திரும்ப அழைத்து கொள்ளப்படுவார்வார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே நெய்வேலி நகருக்குள் செல்லும் வழிகளான சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள ஆர்ச் கேட், கடலூர் - விருத்தாசலம் சாலையிலுள்ள மந்தாரக்குப்பம் ஆகிய இரண்டு பிரதான சாலை நுழைவாயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அவ்வழியாக நகருக்குள் வருபவர்களை முழுமையாக விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்த பின் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேசமயம் நகருக்குள் வருவதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட இணைப்பு சாலை வழிகள் உள்ளன. அவ்வழிகள் வழியாக கிராம மக்கள் நெய்வேலி நகருக்குள் வந்து கொண்டதையடுத்து அந்த வழிகளில் பள்ளம் தோண்டப்பட்டு இணைப்பு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒருசில இணைப்பு சாலைகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு விசாரணைக்கு பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நெய்வேலி நகரியம் மற்ற நகரங்களில் இருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் நெய்வேலி நகரியத்தில் மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT