Skip to main content

புதுச்சேரியில் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு? ஜிப்மரில் தீவிர சிகிச்சை!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸால் சீனாவை சேர்ந்த  17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 362 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

corona virus

 



சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா,  ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. அதனால் சீனாவுக்கு சென்ற பல வெளிநாட்டவர்களும் அவரவர் தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அதுபோல் வேலை, உயர்கல்வி  போன்றவற்றிற்காக சீனாவுக்குச் சென்ற இந்தியர்களும் தாய்நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அந்தந்த விமான நிலையங்களிலேயே உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலை நிமித்தமாக  சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மூன்று சீன நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்த அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு  அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்ததில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து அங்கு அவருக்கு தனி வார்டில் தனி  படுக்கை அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த நபரிடம் இருந்து ரத்த மாதிரியை சேகரித்து சீனாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.  ஆய்வு முடிவு வந்த பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அந்த வாலிபரின் குடும்பத்தில் உள்ள மூவரும்  வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி அரசின் சுற்றுலா மேம்பாடு; 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்'  மியூசியம் திறப்பு

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Opening ceremony Of Artist AP Shreethar's Wonders of White Town 

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்-இல் பிரம்மாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.

வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மைகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.