உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படுகின்றது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. தென் தமிழகத்தில் கடந்த 30 நாட்களாக கரோனா சூறாவளியாகச் சுழன்றடித்து வருகின்றது. மதுரை மாவட்டத்தில் பாதிப்பு அதிகப்படியாக இருக்கும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில்மின்னலாகப் பரவி வருகின்றது. தினந்தோறும், 400 பாதிப்புகளுக்கு மேல் பதிவாகி வருகின்றது. இன்று ஒரே நாளில் மட்டும் 587 பேருக்குக் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு அந்த மாவட்டத்தில் 5,354 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 37 ஆக உள்ளது.