
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா தொற்று நோயாளிகள் குறித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன, அவர்களுக்கு மேலும் கூடுதலாக என்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், சிதம்பரம் நகரத்தின் விளங்கியம்மன் கோவில் தெருவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெரு தடுப்பு கட்டைகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்வையிட்டு அந்தப் பகுதியில் சிதம்பரம் நகராட்சி சார்பில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தொற்று பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள பொதுமக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றும் அங்கு பணியில் இருந்த நகராட்சி முன்களப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தொற்று நோயாளிகளுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாகவும் சிகிச்சையைத் தீவிரப்படுத்த தனிகவனம் செலுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்று நோயாளிகள் உள்ள இடங்களைக் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறி உள்ளதாக கூறினார்.
தமிழக முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து கரோனா நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். தமிழகத்தில் தற்போது தொற்று குறைய தொடங்கியுள்ளது. உதாரணமாக சிதம்பரம் நகரத்தில் முன்பு 172 பாதிப்புகள் இருந்த நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 21 ஆக உள்ளது. மாவட்ட அளவில் 800 ஆக இருந்தது, தற்போது 462 ஆக உள்ளது. எனவே கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது ஆக்சிஜன் சேமிப்பு மையம் விரைவில் துவங்கவுள்ளது. அதில் ஆக்சிஜனுடன் கூடிய 250 படுக்கை வசதிfள் ஏற்படுத்தி தரப்படும். மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. இதனையும் மீறி தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அவர் கூறினார். இந்நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்தியா, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், வட்டாட்சியர் ஆனந்த், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின், சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக், துணைவேந்தர் முருகேசன், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, கண்காணிப்பாளர் நிர்மலா, முன்னாள் கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்ட மருத்துவத் துறையினர், வருவாய்த் துறையினர் காவல்துறையினர் என கலந்துகொண்டனர்.