
கரோனா ஊரடங்கால் கடந்த இரு வருடங்களாக திருநங்கைகள் பங்கேற்கும் கூவாகம் கூத்தாண்வர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட நிலையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருநங்கைகள் இணைந்து கூத்தாண்டவரை வழிபட்டு கூத்தாண்டவர் கரோனா கிருமிகளை அழித்து உலக மக்களை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதுடன், தங்கள் உயிரை துச்சமென நினைத்து மக்களை காக்க ஊரை சுத்தமாக வைத்திருக்கும் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்து ஆசி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பட்டுக்கோட்டையில் தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் கூத்தாண்டவருக்கு வழிபாடு நடத்திய திருநங்கைகள் தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க மாலைகள் அணிந்து கரகம் தூக்கி நகரில் சில வீதிகளை சுற்ற வந்து பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார்கள். தொடர்ந்து கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடப்பது போல சில திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளைப்புடவை அணிந்து கதறி அழுதனர். துக்க வீடுகளில் நடப்பது போல ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதனர். இதுபோன்ற நிகழ்வை முதல்முறையாகப் பார்த்த பட்டுக்கோட்டை நகர மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகரை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், பணம் வைத்து கொடுத்து தூய்மைப் பணியாளர்களை கௌரவப்படுத்தி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று ஆசியும் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்தது. இந்த நிகழ்வுகளுப்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய திருநங்கைகள் கூறும்போது, ''கரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு வருடங்களாக கூவாகம் செல்ல தடைவிதக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து கூத்தாண்டவரை தரிசிக்க திருநங்கைகள் வரமுடியவில்லை. ஆனால் அவர்கள் வசிக்கும் இடங்களில் கூத்தாண்டவரை வழிபடுகிறார்கள். சக்திமிக்க கூத்தாண்டவர் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கரோனாவை அழித்து உலக மக்களை காப்பாற்றுவார். அதற்காக நாங்கள் கூத்தாண்டவரிடம் கேட்டுக்கொண்டோம்'' என்றனர்.

திருநங்கைகளின் கௌரவத்தை ஏற்றுக் கொண்ட தூய்மைப்பணியாளர்கள் கூறும்போது, ''நாட்டு மக்கள் நோயால் அவதிப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் தூய்மைப்பணி செய்கிறோம். எங்களை எவ்வளவோ பேர் பாராட்டுகிறார்கள். ஆனால் இப்போது திருநங்கைகள் எங்களை கௌரவப்படுத்தியது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என்றனர் நெகிழ்ச்சியாக'' திருநங்கைகளின் இந்த செயலை பட்டுக்கோட்டை நகர மக்கள் பாராட்டினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)