Skip to main content

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 7,737 படுக்கைகள்! கலெக்டர் தகவல்

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
pudukkottai district  - Collector

 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகள் தயாராக உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.

 

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறும் போது, 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ராணியார் மருத்துவமனை மற்றும் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகளுடன் கூடிய மையங்கள் ஏற்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டுப்பாட்டில் இயங்கும் ராணியார் மருத்துவமனையில் 1000 படுக்கைகளும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனையில் 200, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் 100, 12 அரசு தாலுகா மருத்துவமனைகளில்  123, 13 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 195 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 121 படுக்கைகளும் என 1739 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் தற்போதைய நிலவரப்படி ராணியார் மருத்துவமனை மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி மருத்துவமனைகளில் 608 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்ற 1,131 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் குடுமியான்மலை வேளாண் பல்கலைக்கழகத்தில் 150 படுக்கைகளும், புதுக்கோட்டை குடிசை மாற்று வாரியத்தில் 1000 படுக்கைகளும், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 100 படுக்கைகளும் என 1250 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

 

எதிர்வரும் நாட்களை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 212 சமுதாயக் கூடங்களில் 1319 படுக்கைகளும், 27 மாணவர்கள் விடுதிகளில் 434 படுக்கைகளும், 121 திருமண மண்டபங்களில் 2,995 படுக்கைகளும் என 4,748 படுக்கைகளும் அமைத்து சிகிச்சை அளித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.