
பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நள்ளிரவில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர்,ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
சிவசங்கர் பாபா மீதான புகார்கள் குவிந்த நிலையில், இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. நேற்று (16.06.2021) டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, நள்ளிரவே சென்னை அழைத்துவரப்பட்டார்.
எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 10 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலுக்காக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இறங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபாவை பாதுகாப்போடு எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிவசங்கர் பாபாவுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இந்த இரண்டு பரிசோதனைகளும் முடிந்த பிறகு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)