
சேலத்தில், கரோனா பரிசோதனை முடிவுகளைத் தொடர்ந்து தவறாக வழங்கிய சண்முகா, குறிஞ்சி மருத்துவமனைகளின் ஆய்வகங்கள் அதிரடியாக மூடி, 'சீல்' வைக்கப்பட்டன.
சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மேலும் 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன.
இப்பணிகளைத் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஜூன் 3ஆம் தேதி நேரில் பார்வையிட்டார். இதையடுத்து அவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்.பி.க்கள் சின்ராஜ், பார்த்திபன், எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊடகத்தினரிடம் கூறியது: "சேலம் மாவட்டத்தில், எந்தப் பகுதியில் கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்தாலும் உடனடியாக அந்தப் பகுதியில் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுவருகிறது. சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் 5,200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில், 13 தனியார் பரிசோதனைக்கூடங்கள் மூலமாக 1,300 பரிசோதனை மாதிரிகள் பெறப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் எடுக்கப்படும் பரிசோதனைகளில் 11 சதவீதம் பாசிட்டிவ் என முடிவுகள் கிடைக்கின்றன. அதேநேரம், சேலத்தில் உள்ள சண்முகா, குறிஞ்சி ஆகிய 2 தனியார் மருத்துவமனைகளின் பரிசோதனைக் கூடங்களில் மட்டும் அதிகளவில் பாசிட்டிவ் என்று முடிவுகள்வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த புகார்களின்பேரில் அந்த இரண்டு தனியார் மருத்துவ பரிசோதனைக்கூடங்கள் பாசிட்டிவ் என வழங்கிய மாதிரிகளை அரசு மருத்துவமனையில் மீண்டும் சோதனை செய்து பார்த்தபோது, கரோனா நெகட்டிவ் என முடிவுகள் கிடைத்தன. இதன்மூலம் அந்த இரண்டு தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடங்களும் பொய்யான ரிசல்ட்டை வெளியிட்டு, அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சண்முகா, குறிஞ்சி ஆகிய இரு மருத்துவமனைகளின் பரிசோதனைக் கூடங்களையும் உடனடியாக மூடி 'சீல்' வைக்கப்பட்டது. அனைத்து தனியார் ஆய்வகங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

சேலம் அரசு மருத்துவமனையில் போதுமான இட வசதி இல்லை என்ற தவறான தகவலை சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர். இரும்பாலையில் தொடங்கப்பட்ட சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தில் இதுவரை 230 நோயாளிகள்தான் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 270 படுக்கைகள் காலியாகத்தான் இருக்கின்றன. ஆகவே, யாரும் மக்களிடம் பதற்றத்தையும் பீதியையும் ஏற்படுத்த வேண்டாம்.
மருந்து கடைகளில் சளி, காய்ச்சலுக்கு யாரும் மருந்து, மாத்திரைகள் தரக்கூடாது. அவ்வாறு வருபவர்கள் குறித்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும்.
விரைவில், சேலம் மாவட்டம் கரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாறும். சேலம் அரசு மருத்துவமனைக்கு முன்பு தினமும் 10 கே.எல். அளவுள்ள ஆக்சிஜன்தான் வந்துகொண்டிருந்தது. இப்போது 27 கே.எல். ஆக்சிஜன் வருகிறது. கரோனா சிகிச்சை அளிக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கினார்களா என்பது குறித்து சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது விளக்கமாக தெரிவிக்கப்படும். தற்போது கரோனாவில் இருந்து மக்களை மீட்பதுடன் சகஜ நிலைக்குத் திரும்ப வைப்பதே ஒரே நோக்கமாகும்." இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.