ADVERTISEMENT

உயிரையும் பறித்து உறவுகளையும் சிதைத்த 'கரோனா' 

07:46 PM Oct 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு பச்சபாளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் 26 வயது ரம்யா. இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்கும் சென்ற 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரம்யா கணவருடன் கிருஷ்ணகிரியில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான குமரேசன் சென்ற ஜூன் மாதம் 1 ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி ரம்யாயை அவரது மாமனார் " உனக்கு ராசி இல்லை... உன்னால்தான் என் மகன் இறந்துவிட்டான்'' எனக் கூறி ரம்யாவை கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.

மேலும் அவர் வீட்டில் இருக்கக்கூடாது என்று கூறி விரட்டியிருக்கிறார். அவரது மாமனாருடன் கணவரின் தம்பியான கொழுந்தனாரும் அவரது மனைவியும் உடன் சேர்ந்து ''ரம்யாவை நீ வீட்டை விட்டுச் செல்லவில்லை என்றால் உன்னையும் உனது அம்மாவையும் கொலை செய்து விடுவோம்'' என மிரட்டியுள்ளனர். இறந்த ரம்யாவின் கணவர் எல்ஐசி பாலிசி போட்டுள்ளார். நல வாரியத்தில் உறுப்பினராகவும் சேர்ந்திருந்தார். அதோடு ரூபாய் 2 லட்சம் சீட்டு ஒன்றும் போட்டிருந்திருக்கிறார். அது மட்டுமல்ல பெற்றோரில் ஒருவர் கரோனா காரணமாக இறந்தால் அரசு உதவி பணம் கிடைக்கும். இவை அனைத்தும் மனைவியான ரம்யாவுக்கு வரும் என்பதால் அவர்கள் அதற்குத் தடையாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில் ஈரோடு வந்த ரம்யா தனது குழந்தையுடன் சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார். அதில் அவர், "என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் எனது 20 பவுன் நகையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே காவல்துறை தலையிட்டு எனது மாமனார், கொழுந்தனார் மற்றும் அவரது மனைவி மீது சட்ட நடவடிக்கை எடுத்து எனக்கு வரவேண்டிய பணம் மற்றும் நகைகளை மீட்டுத்தர வேண்டும். மேலும் எங்களுக்கு உயிர் பாதுகாப்பும் வழங்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார். கரோனா உயிரை மட்டுமா பறிக்கிறது? உறவுகளையும்தான் சிதைக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT