
இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. அதேபோல், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிக அளவில் இருந்துவருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் தொற்று பாதித்தவர்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால், சாலைகளில் வாகனங்களின் நெருக்கடி அதிகளவிலேயே உள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த, தீவிர ஊரடங்கு செயல்படுத்தவில்லை என்றால், கரோனாவின் பரவல் இன்னும் அதிகரிக்கும் எனவும், பாதிப்பும் அதிகமாக இருக்குமெனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பதைக் கணிக்க முடியாத நிலையில், அதற்கான நடவடிக்கைகளுக்குப் போதிய ஒத்துழைப்பு கிடைக்காதது வருத்தமளிக்கிறது.
கடந்த ஒரு நூற்றாண்டில் தமிழ்நாடு சந்தித்த மோசமான பேரழிவு கரோனா வைரஸ் தாக்குதல்தான் என்று கூறும் அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை தமிழ்நாடு எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலால் இதுவரை 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,768 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ கணக்குகள் மட்டுமே. கரோனா சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளாமல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். கரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்தும், குடும்பத் தலைவர்களை இழந்தும் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்களின் எண்ணிக்கை ஏராளம்.
பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் பார்த்தால் கரோனா வைரஸ் தாக்குதலை மூன்றாவது உலகப் போராகவே கருத வேண்டியுள்ளது. இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் நான்கரை ஆண்டுகள் நடைபெற்ற முதல் உலகப் போரில் 1.30 கோடி அப்பாவி மக்களும், பின்னர் 7 ஆண்டுகள் நீடித்த இரண்டாம் உலகப் போரில் 40 கோடி அப்பாவி மக்களும் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் பரவல் தொடங்கிய முதல் ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் உலகில் 16.18 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 33.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 2.40 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 2.62 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியும் அச்சமும் அளிக்கும் வகையில் உள்ள நிலையில், எந்தக் கவலையும், அச்சமும் இல்லாமல் ஊரடங்கை மீறி சாலைகளில் பொதுமக்கள் நடமாடுவது மிகவும் கவலையளிக்கிறது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 100 பேருக்கு கரோனா சோதனை மேற்கொண்டால், அவர்களில் 21 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றுபவர்கள் ஒரு நிமிடம் அலட்சியமாக இருந்தாலும் அவர்கள் கரோனாவால் தாக்கப்படும் ஆபத்து உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டால் அடுத்த சில நாட்களில் சாதாரணமாக குணமடைந்துவிடலாம் என்ற சூழல் இப்போது இல்லை. முதல் அலையின்போது பாதிக்கப்பட்டவர்களில், 30 விழுக்காட்டினருக்கு மட்டும்தான் ஆக்சிஜன் தேவைப்பட்டதாகவும், இப்போது 70 விழுக்காட்டினருக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைக் காண முடிகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ஊரடங்கை மதிக்காமல் பெருமளவிலானவர்கள் சாலைகளில் நடமாடுவது குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்றுமுதல் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரித்திருக்கிறது. காவல்துறையினரும் இன்றுமுதல் வாகனங்களைத் தடுத்து அபராதம் விதித்துவருகின்றனர். ஆனாலும், காவல்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு சாலைகளில் பலரும் திரிந்துகொண்டுதான் இருக்கின்றனர். மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் சற்றும் குறையவில்லை.
கரோனா காலத்தில் காவல்துறையினரும் தங்களின் உயிர்களைப் பணயம் வைத்துதான் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 15 மாதங்களில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 94 காவல்துறையினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். இன்றைய நிலையில் 2,088 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவம் பெற்றுவருகின்றனர். கரோனா தொற்றுக்கு ஆளாகி, எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பவர்கள் சாலைகளில் திரியும்போது அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காவலர்கள்தான் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் வலம் வருபவர்கள் தாங்களும் நோயை வாங்கிக்கொண்டு, மற்றவர்களுக்கும் நோயைத் தருகின்றனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. சாலைகளில் சுற்றுவோரின் வாகனங்கள் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனால் சாலைகளில் சுற்ற பலரும் அஞ்சினார்கள். ஆனால், இப்போது சிறிய தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறதே தவிர, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த அணுகுமுறையை மாற்றி ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுவோரின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் விதிகளை மீறி சாலைகளிலும் தெருக்களிலும் சுற்றாமல் வீடுகளில் அடங்கிக் கிடக்கும் நிலையை உருவாக்க முடியும்.
பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, ஊரடங்கை மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால், கரோனா பரவலை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்து சுதந்திரமாக நடமாடும் சூழலை உருவாக்கலாம். மாறாக, நோய்த்தொற்று அதிகரிப்பது தொடர்ந்தால், வரும் 24ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர் அயர்ந்து போயிருப்பதால், அடுத்தக்கட்டமாக நிலைமையை சமாளிக்க துணை இராணுவப் படையினரை அழைக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே மக்கள் சூழலை உணர்ந்து வீடுகளில் அடங்கி, கரோனா தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.