
கரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் பரவ ஆரம்பித்த நிலையில் கடந்த 26 மாதங்களாக அது ஏற்படுத்திய தாக்கம் என்பது மிக அதிகம். எண்ணற்ற உயிரிழப்புகள், வேலை இழப்புகள், மாணவர்களின் கல்வி பாதிப்பு, தொழிற்சாலைகள் மூடல், சிறு குறு வணிக நிறுவனங்கள் நிரந்தரமாக மூடல் என அனைத்து தட்டு மக்களுக்கும் அதிகபட்ச பாதிப்பினை இந்த கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருந்தது. முதல் அலையில் இந்திய மக்கள் தப்பி பிழைத்து வந்த நிலையில், இரண்டாம் அலை இந்தியாவில் ருத்ர தாண்டவம் ஆடியது. அதன் வீரியம் மிக அதிகமாக இருந்த நிலையில், நிபுணர்கள் கரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்ததன் விளைவாக, பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு மூன்றாவது அலை கரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வைக்கப்பட்டது.
இந்திய அளவில் தற்போது தினசரி கரோனா பாதிப்பு என்பது குறைந்த எண்ணிக்கையில் பதிவாகி வரும் சூழலில் தற்போது கரோனா குறித்த புதிய தகவல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் கரோனா நான்காவது அலை கண்டிப்பாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய கரோனா நிபுணர் குழு தலைவர் இக்பால் தெரிவித்திருந்தார். இதற்கிடையே கான்பூர் ஐஐடி அடிக்கடி கரோனா 4ம் அலையை பற்றி கருத்து தெரிவித்து வந்தது. இந்நிலையில் கரோனா அடுத்த அலை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன், " கரோனா அடுத்த அலை வருமா இல்லையா என்று யாரும் முன்கூட்டியே கணிக்க இயலாது. திருமணத்துக்கு நாள் குறிப்பது போல கான்பூர் ஐஐடி கரோனா நான்காவது அலை இப்போ வரும், அப்போ வரும் என்று தொடர்ந்து கூறி வருகிறது" என்றார்.