









சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,171 ஆக அதிகரித்துள்ளது. 162 நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1,82,598 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 125 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை மூன்று பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இன்னிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கப்படுவதோடு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் மற்றும் எஃமோர் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், ரயில் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பயணிகள் மாஸ்க் அணிந்து செல்கின்றனர்.