Advertisment

சென்னை துறைமுக பொறுப்புக் கழக தேர்தலின்போது கரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்! – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Corona rules must be followed during the Chennai Port Authority election! - High Court order!

துறைமுக பொறுப்புக் கழக நிர்வாகப் பிரதிநிதிகளாக, தொழிற்சங்கத்தினரை தேர்வு செய்யும் தேர்தலின்போது, கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுமென, சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் நிர்வாகத்தில், பிரதிநிதிகளாக தொழிற்சங்கத்தினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகள், அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும் என, துறைமுக பொறுப்பு கழக தலைவர் அறிவிப்பு வெளியிட்டார்.

Advertisment

கரோனாவின் தாக்கம் குறையாமல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை, குறைந்தபட்சம் 6 மாதம் தள்ளிவைக்க வேண்டுமென்று, பாரதிய துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான வி.செல்வராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தலில் பங்கேற்க ஊழியர்கள் கூடும்போது, கரோனா பரவும் அச்சம் இருப்பதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சிலம்பரசன் வாதிட்டார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் சென்னை துறைமுகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கும்படி துறைமுக தலைவர் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தேர்தல் பணியில் பல அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் முலம் தேர்தல் தொடர்பான படிவங்கள் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பல ஊழியர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவது தவிர்க்கப்படும். முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி முறையாக கண்காணிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்ததுடன் துறைமுக நிர்வாகத்தின் கடமை முடிந்துவிடவில்லை. அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவதையும், வரிசையில் நிற்கும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதையும், கிருமிநாசினி வழங்குவதையும், துறைமுக நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தை நேரடியாக நடத்தாமல், மின்னணு முறையிலேயே மேற்கொள்ள வேண்டுமென தொழிலாளர் சங்கங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய - மாநில அரசுகள் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, அனைத்து வகையிலும் கடைபிடித்து, கரோனா தொற்று, ஒருவருக்கு கூட பரவ இடமளிக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, தேர்தல் காலத்திற்கு மட்டுமல்லாமல், வழக்கமான பணிக்காலத்திலும் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe