Skip to main content

கரோனா நிவாரண நிதி முறையாக வரவில்லை... நல வாரிய குழு கூட்டத்தை கூட்ட தொழிற்சங்கம் வலியுறுத்தல்!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

Corona Relief Fund issue

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாயால் அறிவித்த அறிவிப்பு என்ன ஆச்சு? என கேள்வி எழுப்பும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி-யின் ஈரோடு மாவட்ட தலைவர் சின்னுசாமி இன்று மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.


அதில் "கரோனா நோய்தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்படும் கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு கரோனா நிவாரண நிதியுதவியாக இரண்டு முறை தலா 1000 ரூபாய் வீதம் மொத்தம் 2000 ரூபாய் வழங்குவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், நலவாரிய பதிவை புதுப்பித்து நடப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி அரசாணைகளின்படி ஈரோடு மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 30,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் சுமார் 18,000 பேருக்கும், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் சுமார் 2,200 பேருக்கும், உடலுழைப்பு, கைத்தறி, விசைத்தறி, தையல், சலவை, முடிதிருத்துதல், பொற்கொல்லர், கடைகள் நிறுவனங்கள் மற்றும் சாலையோர வணிகர்கள் நலவாரியம் உள்ளிட்ட 15 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 90,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் சுமார் 40,000 பேருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள சுமார் 1,30,000 தொழிலாளர்களில் சுமார் 60,000 பேருக்கு மட்டுமே நிவாரண நிதி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மேற்படி நிவாரண நிதி வழங்கப்படும் 60,000 பேர்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இதுவரை நிவாரண நிதி கிடைக்கப்பெறவில்லை என்பதே உண்மை. மேலும், நலவாரிய பதிவைப் புதுப்பித்து நடப்பில் உள்ள தொழிலாளர்கள் பலருடைய பெயர் பட்டியலில் விடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியுதவி உரிய தொழிலாளர்களுக்கு  விரைவில் சென்றடைவதை உறுதிப்படுத்திடவும், இது தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவும் தங்களது மேலான நடவடிக்கைகளைக் கோருகிறோம். மேலும், கலெக்டர் தலைமையிலான நலவாரிய மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்