Advertisment

அலறும் ஆரணி... தவிக்கும் மக்கள்!- கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்

corona rate in arani

Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு சுகாதார மாவட்டங்கள் உள்ளன, திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், செய்யார் சுகாதார மாவட்டம். தற்போதைய நிலையில் இரண்டு சுகாதார மாவட்டத்திலும் சேர்த்து 2,354 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தங்கவைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளிகளின் உறவினர்களும் தனித்து வைக்கப்பட்டு கண்காணித்து நோய் தொற்று உருவானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தை விட செய்யார் சுகாதார மாவட்டத்தில் அதிகளவில் கரோனா பாதிப்பு மற்றும் பரவல் அதிகமாகவுள்ளது. அதாவது 1,500 பேர் அந்த சுகாதார மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய மருத்துவர்கள், வந்தவாசி, செய்யார், வெம்பாக்கம் தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகள். அதோடு சென்னைக்கு அதிகளவு வேலைக்கு சென்றவர்கள் இந்த பகுதியில் இருந்து சென்றவர்கள்தான்.

Advertisment

அங்கு லாக்டவுன் போட்டபிறகு தங்களது சொந்த ஊர் திரும்பியவர்கள் முறையாக பதிவு செய்து பரிசோதனை செய்துக்கொள்ளவில்லை. கிராம அளவில் அமைக்கப்பட்ட கமிட்டிகளும் அதனை கண்காணிக்கவில்லை. இதனால் தொற்று பரவிவிட்டது. அதனால்தான் தற்போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களைவிட பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்று ஏற்பட்டவர்கள் அதிகமாக வருகிறது என்கிறார்கள்.

இந்நிலையில் ஆரணி நகரத்தில் ஊரடங்கு உள்ளதா என கேள்வி எழுப்பும் நிலையிலேயே உள்ளது என்கிற குற்றச்சாட்டை வியாபாரிகளும், சமூகநல ஆர்வலர்களுமே எழுப்பி வருகின்றனர். ஆரணியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்கள் தேவைக்கு ஆரணி நகருக்கே வருகின்றனர். அப்படி வரும் பொதுமக்களிடம் வியாபாரிகள், வியாபார நிறுவனங்கள் என எங்கும் சமூக இடைவெளியை சுத்தமாக கடைபிடிக்கவில்லை, இதனால் நகரில் இருந்து கிராமத்துக்கும் கிராமத்தில் இருந்து நகருக்கும் நோய் பரவுகிறது.

கடைகள், நிறுவனங்கள், மார்க்கெட் பகுதிகள் என எங்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. குறிப்பாக ஆரணியின் மிக பிரபலமான பாரி பேக்கரி, அமர் கேண்டீன், ராஜா துணிக்கடை, ஸ்டார் பிரியாணி கடைகள் என எங்கும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இதனால் காவல்துறையும் கண்டும் காணாமலே இருக்கிறது. இதுபற்றி சமூக வலைதளங்களில் பலர் குறைபட்டும் காவல்துறை, நகராட்சி, வருவாய்த்துறை என யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

இதுப்பற்றி அதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டபோது, “ஆரணி நகரம் என்பது அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தொகுதிக்குள் வருகிறது. ஆரணியில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள சேவூர்தான் அமைச்சரின் ஊர். கடைக்காரர்கள் பலரும் நான் அமைச்சரின் ஆள் என்கிறார்கள். பாரி பேக்கரியில் எந்நேரமும் கூட்டம் குவிகிறது. சிறிய கடை கூட்டம் நெருக்கியடித்து நிற்கிறது. சமூக இடைவெளி என்றால் என்னவென்று கேட்கிறார்கள் அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்களே. அந்த பேக்கரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. காரணம், அது அமைச்சரின் வலதுகரமாக உள்ள அதிமுக பிரமுகரும், பால் கூட்டுறவு சங்க மாவட்ட துணை தலைவருமான பாபுவின் கடையது. விதிமுறையை கடைப்பிடிக்காத அவர் கடை மீது எப்படி நடவடிக்கை எடுப்பது, இதனால் அந்த சாலையில் உள்ள எந்த கடை மீதும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இப்படி பல கடை உரிமையாளர்கள் அமைச்சரின் ஆள், ஆளும்கட்சி என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றார்.

அமைச்சரின் அரசு கார் ஓட்டுநருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானதும், அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிசோதனை செய்யப்பட்டனர். அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது.அன்று முதல் கடந்த ஒருவாரமாக அமைச்சர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளாமல் தனித்து வீட்டிலேயே குடும்பத்துடன் தனித்து இருக்கிறார். நெருங்கிய கட்சி பிரமுகர்களை கூட சந்திக்கவில்லை. அமைச்சர் அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்போது, அவரது தொகுதி மக்கள் விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

thiruvannamalai arani corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe