
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தல் வெற்றிக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 5-ம் தேதி சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி ஆலயத்துக்கு சென்று வழிபட்டார். பின்னர் புதுச்சேரி திரும்பிய அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து கடந்த 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். முன்னதாக விழாவில் பங்கேற்பவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ரங்கசாமியுடன் நெருக்கமாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பிறகு அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவு இன்று மாலை வெளியானது. அதில் முதல்வர் ரங்கசாமிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.