Skip to main content

தனி ஒருவள்... அக்கினிச்சட்டி வலம்!! - ஆத்தாளிடம் முறையீடு!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

கோடை காலத்தில், அம்மை போன்ற வெப்பகால நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படுவது வழக்கம்.  அத்தகைய நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக்கூடாது என்று அஞ்சிய மக்களின் எதிர்பார்ப்பு மழையாக இருந்தது.  அந்த வகையில், இயற்கையை வழிபட்டு வந்த மக்கள், மழையை மாரியம்மன் ஆக்கினார்கள். கசப்பு சுவை நிறைந்த வேம்பு மரம்,  மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் ஆனது. ஆதிசக்தியின் வடிவம் என்று நம்பப்படும் மாரியம்மன் இடத்திற்கு ஏற்றாற்போல், பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.

 

corona prevention worship- Virudhunagar Mariamman Temple festival



விருதுநகர், விருதுபட்டியாக இருந்தபோதே, 1780-ல் சிறு பீடம் அமைத்து மாரியம்மனை அங்குள்ள மக்கள் வழிபட ஆரம்பித்தனர். 1859-ல் பீடத்தின் மீது சிலை வைத்தனர். அன்றிலிருந்தே பங்குனி பொங்கல் விழா நடந்து வருகிறது.  1923-ல் இக்கோவிலுக்கு புதிய கட்டடம் கட்டினர். 1933 முதல் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தென்மாவட்ட கோவில் திருவிழாக்களில், விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவில், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, வேப்பமர இலைகளை உடுத்தி, அக்கினிசட்டி எடுத்து, வாயில் சூலம் குத்தி, ரதம் இழுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நகரில் வலம் வருவதை அம்மனுக்கு செலுத்தும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் கருதி வருகின்றனர்.

கடந்த 87 ஆண்டுகளாக,  பல்லாயிரக்கணக்கான  அம்மன் பக்தர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த இவ்விழா,  கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், இந்த வருடம், வீடுகளில் விளக்கு ஏற்றி, அம்மனை வணங்கி பொங்கல் வைத்து வழிபடும் எளிய விழாவானது.
 

nakkheeran app




ஆனாலும், தங்களில் ஒருவளாகவே கருதப்பட்டுவரும்  ‘மாரியாத்தா’ மீது கொண்ட பாசத்தால்,  “என்ன ஆத்தா.. இப்படி பண்ணிட்ட.. உன் சன்னதிக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்த முடியாம பண்ணிட்ட.. நீ கோபப்பட்டா நாங்க தாங்க மாட்டோம்.. இந்த கரோனா கூட உன்னோட கோபம்தான். எங்கள மன்னிச்சிரு.. மலைபோல துன்பம் வந்தாலும் பனிபோல விலக்கிருவியே.. மக்களை கொஞ்சம் கருணைக் கண் கொண்டு பார்.. இந்த கரோனாவ இருக்கிற இடம் தெரியாம பண்ணிரு..” என்று அம்மனை மனதில் நிறுத்தி விருதுநகர் மக்கள் வேண்டி வருகின்றனர்.

ஒரு பக்தையோ, ‘ஊரடங்குன்னா கூட்டம் கூடக்கூடாது. அவ்வளவுதானே! ஆத்தாவுக்கு செலுத்த வேண்டிய அக்கினிச்சட்டி நேர்த்திக்கடனை, நான் மட்டும் போயி செலுத்திட்டுப் போறேன்.’ என்று தனி ஒருத்தியாக அக்கினிச்சட்டி ஏந்தி, விருதுநகர் சாலைகளில் வலம் வந்தார். பூட்டப்பட்டிருந்த பராசக்தி மாரியம்மன் கோவிலை அவர் அடைந்ததும், அங்கு ஏற்கனவே வெளியில் நின்றபடி கரோனா அச்சம் குறித்து ஆத்தாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்த பெண்கள், ‘ஆஹோ.. அய்யாஹோ..’ என கோஷம் எழுப்பினர். அக்கினிச்சட்டி பக்தையோ சாமி வந்து ஆடி தரையில் விழுந்து வணங்கினார். 

உனக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும் என்னும் புரிந்துணர்தலே நம்பிக்கை. இது உளவியல் சார்ந்த ஒரு விஷயமாகும்.   தன் மீதான நம்பிக்கை, இயற்கையின் மீதான நம்பிக்கை, இறை நம்பிக்கை இவையனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எதுவாகினும் பகுத்தறிவதே சரியென்று நம்பும் கொள்கையும்கூட ஒருவித நம்பிக்கைதான். இதைத்தான், வாழ்க்கை என்னும் சக்கரம் சுழல்வதற்கு நம்பிக்கை என்ற அச்சாணி அவசியம் என்கிறார்கள்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.