கரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு மூன்றாவது நாளாக அமலில் உள்ளது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இந்த 724 பேரில் 66 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 17 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இதில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இது குறித்து தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி முதல்வர் பழனிசாமியிடம் இன்று (27/03/2020) காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். தமிழக அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பிரதமர் மோடியிடம் முதல்வர் விளக்கினார்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முதல்வரிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். மக்கள் தனிமைப்படுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டுக்கொண்டார். பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மோடி கூறினார்." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.