
சேலத்தில், அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பத்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த வாரம் செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அதன்படி, சேலம் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரியிலும் வகுப்புகள் தொடங்கி நடந்துவருகின்றன. கரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக் கொண்டவர்கள் அல்லது கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே வகுப்பில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் (செவிலியர் பயிற்சி) மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு நேற்று முன்தினம் (18.08.2021) காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின் அவருக்கு கரோனோ தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து, அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மேலும் 19 மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 9 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தொற்று பாதிப்பு இல்லாத மற்ற மாணவிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், ''சேலம் அரசு செவிலியர் கல்லூரியில் 100 மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடன் படித்துவரும் மற்ற 90 மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. மாணவிகள் அனைவருக்கும் முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.