Skip to main content

கரோனா ஊரடங்கு முடிந்தாலும் சீராகாத தொழில்கள்...!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

Corona period is over but unbalanced industries ...!


ஈரோடு மாட்டுச் சந்தை மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு வாரமும் புதன், வியாழக் கிழமைகளில் மாட்டுச் சந்தை கூடும். இதில் புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்தச் சந்தைக்கு வாரந்தோறும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் மாடுகள் கொண்டுவரப்படும். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலத்தினரும் இங்கு வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். 

 

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்ற மார்ச் மாதம் முதல் மாட்டுச் சந்தைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த 6 மாதங்களாக கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை நடைபெறவில்லை. இந்த நிலையில், அரசின் உத்தரவின் அடிப்படையில் கடந்த வாரம் முதல் சந்தை கூடியது. ஆனால், மாட்டுச் சந்தை செயல்படுவது குறித்து விவசாயிகளுக்கும், மாடு விற்பனையாளர்களுக்கும் முறையாகத் தகவல் தெரிவிக்கப்படாததால் இங்கு மாடுகள் வரத்தும் விற்பனையும் குறைந்திருக்கிறது. இதையடுத்து, இந்த வாரம் கூடிய சந்தையில் புதன் முதல் வியாழன் காலை வரை பசு மாடு, எருமை மாடு, கன்று என அனைத்தும் சேர்த்து வெறும் 130 மாடுகளே வரத்தானது. 


மாடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால், மாடுகள் போதியளவில் வரத்து இல்லாததால் வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். வருகை தந்த வியாபாரிகளின் பெயர், ஊர், செல் நம்பர், முகவரி போன்றவையும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.

 

Ad


இது சம்பந்தமாக மாட்டுச் சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், “மாட்டுச் சந்தை நடைபெறுவது குறித்து அனைத்து மாவட்ட மற்றும் வெளிமாநில வியாபாரிகளுக்கு ஃபோன் மூலமும், வாட்ஸ் அப் மெசேஜ் மூலமும் தகவல் தெரிவித்தோம். அதன்பேரில், வியாபாரிகள் வழக்கம்போல் மாடுகளை வாங்க வந்து விட்டனர். ஆனால், மாடு விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் முறையாகத் தகவல் போய்ச் சேராததால், இந்த வாரம் சொற்ப அளவிலேயே மாடுகள் வரத்தானது. அதனால், வரத்தான மாடுகள் 95சதவீதம் விற்பனையானது. இனி வரக்கூடிய வாரங்களில் மாடுகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார். கரோனா ஊரடங்கு முடிந்தாலும் ஒவ்வொரு தொழிலும் ஏற்பட்ட தேக்கம் நிலமை சீராகாமல்தான் உள்ளது. என்பதற்கு இந்த மாட்டுச் சந்தை வியாபாரமே எடுத்துக்காட்டாக இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்