‘Corona Negative Certificate on Payment’-Youth Arrested

இந்தியாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகஉள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக அதிகரித்தபோதிலும், சர்வதேச விமான போக்குவரத்துக்கு இன்னும் தடை நீடிக்கிறது. சில குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டும் ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆகியோர்மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதியளித்துவருகின்றனர். இந்நிலையில், போலி கரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டிய வாலிபர் சிக்கிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் மருத்துவ பரிசோதனை மையம் நடத்திவருபவர் ஹாரிஸ் பர்வேஸ் (30). இவரது மையத்தில் கரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்நிலையில், பர்வேஸ் நடத்திவரும் பரிசோதனை மையத்தின் பெயரில் போலியாக கரோனா சான்றிதழ் வழங்கப்படுவதாக பர்வேசுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் வரக்கூடிய விளம்பரத்தையும் பர்வேஸ் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில், விமான பயணிகளுக்கு ரூ. 500 கட்டணத்தில் உடனடியாக கரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு பர்வேஸ் வாட்ஸ் அப் செய்து ரூ. 500 பணத்தைக் கூகுள் பே மூலமாக அனுப்பியவுடன் உடனே கரோனா நெகட்டிவ் சான்றிதழ் பர்வேசின் எண்ணுக்கு வந்தது.

Advertisment

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பர்வேஸ், உடனடியாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விளம்பரத்தில் குறிப்பிட்ட எண்ணை வைத்து இந்த மோசடியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இன்பர்கான் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது நண்பர் உதவியுடன் கடந்த 6 மாதங்களாக மோசடி வேலையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார். மேலும்இன்பர்கான், தங்கம் உள்ளிட்டவற்றை வெளிநாட்டிற்கு கடத்துபவராகவும் செயல்படுபவர் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் மூலம் வெளிநாடு செல்லும் நபர்களைக் குறிவைத்து கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்துவந்தது தெரியவந்தது.

குறிப்பாக கடந்த 6 மாதத்தில் 500க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களிடம் ரூ. 500 பெற்றுக்கொண்டு அனைவருக்கும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் உல்லாசமாக இருந்துவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கைதான இன்பர்கானை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ளஇன்பர்கானின் நண்பரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.