/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1111 highcourt_53.jpg)
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு ஆய்வுக் கூடத்தில், கரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதி ஒதுக்கக்கோரிய வழக்கு குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு செங்கல்பட்டு அருகே உள்ள அலப்பாக்கத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல். என்கிற ஆய்வுக் கூடம் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தில் ராபிஸ் போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்ப மருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், செங்கல்பட்டு ஆய்வுக் கூடத்தில் கரோனா பரிசோதனைகருவிகள் மற்றும் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்க போதுமான நிதி, உபகரணங்கள் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னையைசேர்ந்த வழக்குரைஞர் அய்யாதுரை என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அளவு பரிசோதனை செய்வதால் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யும் நிலை ஏற்படுகிறது.அங்கு கரோனா பரிசோதனைக்கு 4 ஆயிரத்து 500 முதல் 6000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும்,கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க சில தனியார் நிறுவனங்களுடன் அரசு கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாவதாகவும், இதுபோன்ற மருந்துகள் தயாரிக்கும் பணியை, தனியாரிடம் வழங்காமல் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.டி. ஆஷா அமர்வு, ஜூன் 3-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.
Follow Us