/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11111_333.jpg)
முகக்கவசங்களுக்கான உற்பத்தி, விற்பனை தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுவுக்குப்பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், 3 லேயர் மாஸ்க், என்95 மாஸ்க், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாஸ்க், காட்டன் மாஸ்க் மற்றும் வெட்டி வேரால் செய்யப்பட்ட மூலிகை மாஸ்க் என, பல மாஸ்க்குகள் விற்கப்படுகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1111 highcourt_37.jpg)
இதுமட்டுமல்லாமல், தங்களுடைய முகங்கள் போல் மாஸ்க்கில் அச்சிட்டு அதைப் பயன்படுத்தும் வகையிலும், மக்களைக் கவரும்படியான பலவித மாஸ்க்குகள் அறிமுகமாகியுள்ளன.
எந்த முகக்கவசங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், அதன் விலை, தரம் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனம், முகக்கவசம் காலவதியாகும் தேதி போன்ற விதிகளை உருவாக்கக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், முகக்கவசம் தொடர்பான தெளிவான விதிமுறைகளை வகுத்து அரசு அறிவிக்கவில்லை என்றால், முகக்கவசத்தை யார் வேண்டுமானலும் உற்பத்தி செய்து, அவர்கள் விருப்பட்ட விலைக்கு, ரசீது ஏதும் இன்றி விற்கும் சூழல் உருவாகும். எந்தெந்த முகக்கவசத்தை, எந்தெந்த வயதினர் அணிய வேண்டும், உற்பத்தி, விலை, தரம், காலாவதி காலம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டு, முகக்கவசத்திற்கான விதிமுறைகளை வெளியிட வேண்டும். அதுவரை முகக்கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். முகக்கவசத்தைப் பயன்படுத்துவது மற்றும் பயன்படுத்திய பின்னர் அதைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என விதிமுறைகள் வகுக்கபட்டுள்ளனவா எனக் கேள்வி எழுப்பியதோடு, இது தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களும் தங்களுக்கான பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்து, விசாரணையை 2 வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01.gif)