Skip to main content

கரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்; கும்பகோணம் நெகிழ்ச்சி!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

Famous doctor kumbakonam

 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்த பிரபல மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கை சம்பிரதாய முறைப்படி நடத்திவைத்து இறுதிவரை களத்தில் நின்ற தஞ்சை த.மு.மு.க.-வினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் விஷ்ணுப்பிரியா. பிரபல மகப்பேறு மருத்துவராக அந்தப் பகுதியில் விளங்கியவர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் போக, உடனே தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கரோனோ தொற்று இருப்பதை உறுதி செய்து, அதற்கான சிகிச்சை அளித்துவந்தனர்.

 

இந்த நிலையில் வயோதிகக் காரணத்தால், சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவ மனையில் மரணமடைந்தார். அவரது உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு களமிறங்கிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை I.M. பாதுஷாவிடமும் இறுதிச் சடங்கை நடத்தித் தரவேண்டும் என்றும் அவருடைய சொந்த ஊரான கும்பகோணத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவரின் மகன் டாக்டர் ஹரி பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். 

 

அந்த வேண்டுகோளை ஏற்று உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற தஞ்சை I.M.பாதுஷா தலைமையிலானவர்கள் விரைந்து சென்ற த.மு.மு.க. சகோதரர்களும், 'உறவுகள்' அறக்கட்டளையின் நிர்வாகிகளும் த.மு.மு.க.-வின் தஞ்சை மாநகர ஆம்புலன்ஸை வரவழைத்து அவருக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைச் செய்தனர். 

 
"மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனையில் மரணித்த மருத்துவரின் உடலுக்கு கெமிக்கல் வைக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கு வழங்கினர். உடனடியாக சிறிதும் தாமதப்படுத்தாமல் த.மு.மு.க. தொண்டர்கள் மருத்துவமனையில் நுழைந்து பாதுகாப்புக் கவசங்களுடன் உள்ளே சென்று இறுதிச் சடங்கிற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு பிரேதத்தை முறையாக பேக் செய்து த.மு.மு.க.-வினுடைய ஆம்புலன்சில் ஏற்றி அவருடைய சொந்த ஊரான கும்பகோணத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு த.மு.மு.க. நிர்வாகிகள் தயார் நிலையில் மயான நிலையத்தில் காத்திருந்தனர். 

 

http://onelink.to/nknapp

 

த.மு.மு.க. ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்ட டாக்டரின் உடல் தஞ்சை மாநகர மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகளால் இந்து முறைப்படி அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க தகனம் செய்யப்பட்டது. 

 

மருத்துவர் விஷ்ணு பிரியாவின் குடும்பத்தினர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் த.மு.மு.க. நிர்வாகிகளுக்குக் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்