Advertisment

"அரியலூரில் கரோனா வைரஸை பரப்ப தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் துடிக்கிறாரா"? - எஸ்.எஸ். சிவசங்கர் கண்டனம்

Advertisment

கரோனா வைரஸைதடுக்க பிரதமர் ஊரடங்கை அறிவித்த நிலையில் அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலை நாளை முதல் இயக்க தொழிலாளர்கள் வரவேண்டும் என்று தொழில்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளதாகவும், இதனால் அரியலூரில் கரோனா வைரஸ் பரவும் நிலை ஏற்படும் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார் அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர்.

Advertisment

இதுதொடர்பாக எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரியலூரில் அரசுக்குச் சொந்தமான சிமெண்ட் ஆலை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கை அறிவித்த பிறகும்,இந்த ஆலை இயங்கி வந்தது. அதற்குத் தொழிலாளர்களும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பத்திரிகைகளில் செய்தி வெளி வந்தது.

மக்களுடைய எதிர்ப்பிற்கு பிறகு, ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டது.ஆலை நிறுத்தப்பட்ட நாட்களிலும் தொழிலாளர்கள் ஆலைக்கு வர வேண்டும்,இல்லை என்றால் சம்பளம் கிடையாது என அறிவித்து,தொழிலாளர்களை வாட்டினார்கள்.

Ariyalur Cement

இந்த நிலையில், மீண்டும் நாளை (03.04.2020) முதல் ஆலையை ஓட்ட வேண்டும் எனத் தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.

ஆலை ஓடும் சூழல் வந்தால், 400-க்கும் மேற்பட்டோர் ஆலைக்கு வரும் நிலை ஏற்படும். இவர்கள் பத்து கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள தங்கள் இருப்பிடத்திலிருந்து ஆலைக்கு வர வேண்டும்.இதை ஒட்டி இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும்.இது தேவையில்லாத பிரச்சினையை அதிகரிக்கும். வைரஸ் பரவலை அதிகரிக்கும்.

உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போல சிமெண்ட் ஒன்றும் அத்தியாவசியப் பொருள் அல்ல.எங்கும் கட்டுமானப் பணி நடைபெறவில்லை. இந்த நிலையில் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி அவசியம் என்றால் ஆலையில் ஏற்கனவே 10,000 டன் சிமெண்ட் கையிருப்பில் உள்ளது.அதுமட்டுமல்லாமல் 30,000 டன் சிமெண்ட் உடனடியாகத் தயாரிக்க மூலப்பொருட்களும் கையிருப்பில் உள்ளன.

சிமெண்ட்டைத் தயாரித்தாலும் வெளியில் அனுப்பவோ, விற்கவோ இயலாது. இப்படிப்பட்ட நிலையில் சிமெண்ட் ஆலையை ஓட்ட வேண்டிய அவசியம் என்ன?

சில தனிப்பட்ட லாபங்களுக்காக ஆலையை ஓட்ட முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. மூலப்பொருட்கள் கொள்முதல்,ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்பந்தம் போன்றவற்றின் மூலம் தனிப்பட்ட பணப்புழக்கம் தொடர்வதற்காக இந்த முயற்சியா என்ற வினா உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் அனைவரையும் வீட்டுக்குள் தங்க வைக்க கடும் முயற்சி எடுக்கும் நிலையில், அரியலூர் சிமெண்ட் ஆலையை ஓட வைக்க ஏன் இந்த முயற்சி? 400 தொழிலாளர்களின் குடும்பமும் பயத்தோடு ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டுமா?

அப்படி ஆலை ஓடுவது அவசியம் என்றால், அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.அதை விடுத்து திருட்டுத்தனமாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காரணம் என்ன? உடனே தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.சிமெண்ட் ஆலையை ஓட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அரியலூர் மாவட்ட தி.மு.க சார்பாக வலியுறுத்துகிறேன்''.இவ்வாறு கூறியுள்ளார்.

Ariyalur cement factory mkstalin statement ss sivasankar
இதையும் படியுங்கள்
Subscribe