Erode District

தொடர்ந்து மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் கரோனா வைரஸ் அதன் தீவிரத்தை இழந்தபாடில்லை. இதன் பரவலால் ஈரோட்டில் மூன்று காவல் நிலையங்கள்பூட்டப்பட்டுவிட்டன.

Advertisment

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து காவலர்களுக்கும் தொற்றுநோய் உள்ளதாஎன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisment

பரிசோதனை முடிவில் பவானி காவல் நிலைய ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் என்பவருக்கு தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வசித்து வரும் தனியார் தொலைக்காட்சி நிருபர் செந்தில்குமாருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரையும் பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து பவானி நகரப் பகுதிகளில் வைரஸ் தொற்று பரவுதல் அதிகமாகி வருகிறது. பவானி காவல் ஆய்வாளருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆப்பக் கூடல், பவானி ஆகிய காவல் நிலையத்தில் கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டு வருவாய் துறையினர் போலீஸ் ஸ்டேசனை பூட்டி அங்கு வெளி ஆட்கள் யாரும் வராத அளவிற்கு காவல் நிலையத்தை பாதுகாத்து வருகின்றனர்.

Advertisment

அதேபோல் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி உதவி காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து காவல் நிலையம் பூட்டப்பட்டது. அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் குடும்பத்தினர் மற்றும் காவலர்கள் 80 நபர்களுக்கு புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

புளியம்பட்டி நகராட்சி ஊழியர்கள் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் கிருமி நாசினி தெளித்தனர். கடந்த சில நாட்களாக புளியம்பட்டியில் புதிய தொற்று கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று உதவி காவல்துறை ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது புளியம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவானி நகராட்சி அலுவலர் ஒருவருக்கும், ஈரோடு மாநகராட்சி அலுவலர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதியானதால் இந்த அலுவலகங்களும் பூட்டப்பட்டன.

வைரஸ் தொற்று உறுதியான பலருக்கும் காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லாமல் இருப்பதோடு, வைரஸ் பாதித்தவர்கள் எவ்வித தொடர்பிலும் இல்லாதவர்கள் என்பதால் போலீஸ் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.