Corona infection One person lost his life in Villupuram

தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா, சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐயாயிரத்தை கடந்து 5,364 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

இன்று (06.06.2025) ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 221 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பரப்பேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கட்டட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். அங்கு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

Advertisment

அதன் பின்னர் அவர் அங்கிருந்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். இருப்பினும் காய்ச்சல் அதிகமானதைத் தொடர்ந்து அங்கிருந்து அவர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தியாகராஜன் சிகிச்சை பலனின்றி இன்றுபரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக அவருக்குக் கொரானா நோய்த்தொற்று குறித்து ஆய்வு செய்த போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஹைதராபாத்தில் இருந்து வரும்போது அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.