Skip to main content

இரு தவணை தடுப்பூசி போட்டும் ஒரே காவல் நிலையத்தில் 7 பேருக்கு கரோனா உறுதி!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

Corona infected policemen vaccinated twice ..!

 

ஈரோடு மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வைரஸ் தொற்று பரவியது. முன்கள பணியாளர்களான  மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் உட்பட பலரும் பாதிப்புக்குள்ளானார்கள். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர். அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது அதன் பாதிப்பு குறைந்து வருகிறது.

 

அதேவேளையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 68 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒரு போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. உள்பட 7 போலீசாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

 

அந்தியூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், மூன்று சப்-இன்ஸ்பெக்டர்கள், இரண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 15 ஏட்டுகள், 10 முதன்மை காவலர்கள், 2 போலீசார் என மொத்தம் 33 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர்.

 

இந்த நிலையில் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் வேன் டிரைவராக பணிபுரியும் செல்வம் என்பவருக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் செல்வத்திற்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏட்டு ரமேஷ் சந்திரன், பெண் தலைமை காவலர் சகுந்தலா, முதல்நிலை பெண் காவலர் உதயகுமாரி, தனிப் பிரிவு தலைமை காவலர் மெய்யழகன், காவலர் சிவகுமார்  உள்பட 6 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டது. அதேபோல் பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயனுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் அங்கு கிருமி நாசினி தெளித்தனர். தொற்று பாதிப்பு ஏற்பட்ட போலீசார்களில் ஒரு சிலர் வீட்டு தனிமையிலும், சிலர்  மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

கரோனா தடுப்பூசி செலுத்திய பின்பும் கரோனா வர வாய்ப்புள்ளது. அதனால், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. அதுமட்டுமின்றி, கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகும் தொற்று ஏற்பட்டாலும் மரணத்திலிருந்து காப்பாற்றலாம் என்றும் அரசு தெரிவித்துவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த சிறுத்தை; கூண்டு வைத்துப் பிடித்த வனத்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
leopard caught in a cage while hunting cattle near Thalavady

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு மாடுகளைக் கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த   மல்குத்திபுரம் தொட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகளையும், 2கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் ஆகியவற்றை வேட்டையாடி கொன்றது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்தச் சிறுத்தை கொன்று  வந்தது.  அதே போல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும்  சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு  கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அந்தப் பகுதிக்கு வந்த சிறுத்தை  கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்றபோது கூண்டில் சிக்கி உள்ளது. இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இந்தத் தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் லாரியில் வந்து கூண்டுடன் சிக்கிய சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு செல்ல அழைத்து சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.