Skip to main content

கரோனாவால் இறந்தவரின் முகத்தைப் பார்த்து அதிர்ந்த உறவினர்கள் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

corona incident in kallakurichy

 

கள்ளக்குறிச்சியில் கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் மற்றொரு குடும்பத்தினரிடம் அரசு மருத்துவமனை அலட்சியமாக ஒப்படைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த மனோ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 27ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சுயநினைவின்றி காணப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டது.

 

அந்த மருத்துவமனையிலேயே செவிலியராகப் பணிபுரிந்த ஒருவர் மனோவின் உறவினராக இருந்ததால் அவரை அவ்வப்போது அடிக்கடி விசாரித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மனோ உயிரிழந்ததாகவும் அவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மனோவின் உறவினர்களுக்கு இந்தத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தொட்டியத்திற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த மனோவின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்ற  போது, உறவினர்கள் இறுதியாக அவரது முகத்தைப் பார்க்க விரும்பினர். இதனால், அவரது உடலுக்கு மேலே போர்த்தப்பட்டிருந்த வெள்ளைத் துணியை அகற்றிய போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் உள்ளே இருந்தது வேறு ஒருவரின் சடலம்.

 

Ad

 

இதனால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் இது தொடர்பாக அரசு மருத்துவமனையிடம் தெரிவிக்க, மருத்துவமனை ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுதுதான் உண்மை தெரியவந்தது. கரோனா காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவரை சாதாரண கரோனா வார்டுக்கு மாற்றியுள்ளனர். அதே நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில், அதே படுக்கையில் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த   ராமன்  இறந்துவிட, அந்தப் படுக்கையிலிருந்த மனோவின் உறவினருக்குத் தகவல் கொடுத்துள்ளது அரசு மருத்துவமனை நிர்வாகம்.

 

இதன் பிறகு, உடனடியாக திருக்கோவிலில் உள்ள ராமனின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் கரோனா என்ற ஒற்றைச் சொல் மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டி, அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் இப்படி நடந்திருக்கும் ஒரு அலட்சியம், மேலும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.