Advertisment

கரோனா விடுமுறையில் பனை விதைகள் சேகரித்து சுதந்திர தினத்தில் நடவு செய்த மாணவ சகோதரிகள்

Advertisment

கரோனா பலரையும் பலவாறாக மாற்றி இருக்கிறது. சிலர் தீய செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், இயற்கை விவசாயம், கோழி வளர்ப்பு, கிராமங்களின் வளங்கள் மீட்பு, நீர்நிலை மீட்டு என பலர் நல்ல செயல்களை செய்து வருகிறார்கள். இப்படித்தான் மாணவிகளான, சகோதரிகள் தங்கள் பகுதியில் பனை மரங்களில் இருந்து பழுத்துக் கொட்டும் பனை விதைகளை சேகரித்து சென்னை வரை அனுப்பியதுடன் சுதந்திர தினத்தில் தங்களின் சொந்த ஊர் ஏரிகளில் கிராம இளைஞர்கள் உதவியுடன் பனை விதைகளை நடவு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தை சேர்ந்தவர் சர.இரும்பொறை. இவரது மகள்கள் மாட்சிமை, உவகை. சகோதரிகளான இவர்கள் கல்லூரி மாணவிகள். தற்போது கரோனா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

தினசரி தங்கள் தந்தையுடன் தோட்டத்திற்கு சென்று தந்தைக்கு உதவியாக தோட்ட வேலைகள் செய்த பிறகு அவர்களின் தோட்டத்தின் ஓரத்தில் நிற்கும் பனை மரங்களில் இருந்து பழுத்து கொட்டும் பனை விதைகளை சேகரித்து வந்தனர். தங்களின் பனை விதை சேகரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் போட்ட நிலையில், சென்னை, தஞ்சை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தொடர்பு கொண்டு தங்களுக்கும் பனை விதைகள் வேண்டும் என்று கேட்டு பார்சல்கள் மூலமாக பெற்று வருகின்றனர். இதுவரை பல ஆயிரம் விதைகள் அனுப்பியுள்ள நிலையில், சுதந்திர தினத்தில் நடவு செய்ய 3 ஆயிரம் விதைகள் கேட்டுள்ளனர். அந்த விதைகளை அனுப்பி உள்ளனர். மேலும் 11 ஆயிரம் விதைகள் வரை பலரும் கேட்டுள்ளனர், அதற்கான சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் தான் தங்களின் சொந்த ஊரில் உள்ள ஏரி, குளங்களில் பனைவிதைகள் நடவு செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்ட போது தாங்கள் சேகரித்து வைத்திருந்த பனைவிதைகளுடன் அய்யன்குளம் ஏரிக்குச் சென்று ஊராட்சி மன்றத் தலைவர் ஜியாவுதீன், துணைத்தலைவர் கைலாசம், உறுப்பினர் அருள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில கரை ஓரங்களில் நடவு செய்தனர்.

சகோதரிகள் கூறும்போது, “இயற்கை மீது ஆர்வம் கொண்ட நாங்கள் மரங்கள் வளர்ப்பதை செய்து வருகிறோம். கஜா புயலில் எங்கள் பகுதியில் உள்ள மா,பலா, தென்னை, என ஒட்டுமொத்த மரங்களும் வேரோடு சாய்ந்தது. ஆனால் பனை மரங்கள் மட்டும் நிலைத்து நின்றது. அதனால் கரோனா விடுமுறை காலம் வீட்டில் அமர்ந்து பொழுது போக்குவதைவிட நிலத்தடி நீரை சேமித்து வறட்சி, புயலை தாங்கி வளரும் பனை விதைகளை சேமிக்கலாம் என்று நினைத்தோம். சேகரிப்பை தொடங்கினோம். அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட போது வரவேற்பு கிடைத்தது. பலரும் பனை விதை வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு பார்சல்கள் மூலம் அனுப்பி வருகிறோம். அதைபார்த்து மேலும் பலர் கேட்டுள்ளனர். சுதந்திர தினத்தில் மட்டும் நடவு செய்ய 3 ஆயிரம் விதைகள் கேட்டிருந்தனர் அனுப்பி வைத்தோம். மேலும் 11 ஆயிரம் விதைகள் வரை கேட்டுள்ளனர். அந்த விதைகளை சேகரித்து வருகிறோம். சேகரித்த விதைகளை அண்ணன் சிகா.லெனின் தான் பார்சல் செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி உதவி செய்கிறார்.

மேலும் எங்கள் செரியலூர் கிராமத்தில் பனை விதைகள் நடவு செய்ய ஆசைப்பட்டோம். அதே போல சுதந்திர தினத்தில் நடவு செய்திருக்கிறோம். தொடர்ந்து நடவு செய்வோம். இதே போல இந்த கரோனா காலத்தில் வீட்டில் இருக்கும் அனைவரும் தற்போது கிடைக்கும் பனை, வேம்பு, புங்கன் போன்ற பல்வேறு வகையான விதைகளை சேகரித்து குளம், ஏரி, சாலை ஓரங்கள், பொது இடங்களில் விதைத்துவிட்டால் இன்னும் சில வருடங்களில் நிறைய மரங்களை உருவாக்க முடியும். அப்போது தான் இயற்கையோடு நாம் வாழ முடியும்” என்றனர்.

Keeramangalam palm tree
இதையும் படியுங்கள்
Subscribe