Skip to main content

கரோனா விடுமுறையில் பனை விதைகள் சேகரித்து சுதந்திர தினத்தில் நடவு செய்த மாணவ சகோதரிகள்

Published on 16/08/2020 | Edited on 16/08/2020

 

கரோனா பலரையும் பலவாறாக மாற்றி இருக்கிறது. சிலர் தீய செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், இயற்கை விவசாயம், கோழி வளர்ப்பு, கிராமங்களின் வளங்கள் மீட்பு, நீர்நிலை மீட்டு என பலர் நல்ல செயல்களை செய்து வருகிறார்கள். இப்படித்தான் மாணவிகளான, சகோதரிகள் தங்கள் பகுதியில் பனை மரங்களில் இருந்து பழுத்துக் கொட்டும் பனை விதைகளை சேகரித்து சென்னை வரை அனுப்பியதுடன்  சுதந்திர தினத்தில் தங்களின் சொந்த ஊர் ஏரிகளில் கிராம இளைஞர்கள் உதவியுடன் பனை விதைகளை நடவு செய்தனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தை சேர்ந்தவர் சர.இரும்பொறை. இவரது மகள்கள் மாட்சிமை, உவகை. சகோதரிகளான இவர்கள் கல்லூரி மாணவிகள்.  தற்போது கரோனா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

 

தினசரி தங்கள் தந்தையுடன் தோட்டத்திற்கு சென்று தந்தைக்கு உதவியாக தோட்ட வேலைகள் செய்த பிறகு அவர்களின் தோட்டத்தின் ஓரத்தில் நிற்கும் பனை மரங்களில் இருந்து பழுத்து கொட்டும் பனை விதைகளை சேகரித்து வந்தனர். தங்களின் பனை விதை சேகரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் போட்ட நிலையில், சென்னை, தஞ்சை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தொடர்பு கொண்டு தங்களுக்கும் பனை விதைகள் வேண்டும் என்று கேட்டு பார்சல்கள் மூலமாக பெற்று வருகின்றனர். இதுவரை பல ஆயிரம் விதைகள் அனுப்பியுள்ள நிலையில், சுதந்திர தினத்தில் நடவு செய்ய 3 ஆயிரம் விதைகள் கேட்டுள்ளனர். அந்த விதைகளை அனுப்பி உள்ளனர்.  மேலும் 11 ஆயிரம் விதைகள் வரை பலரும் கேட்டுள்ளனர், அதற்கான சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். 
இந்த நிலையில் தான் தங்களின் சொந்த ஊரில் உள்ள ஏரி, குளங்களில் பனைவிதைகள் நடவு செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்ட போது தாங்கள் சேகரித்து வைத்திருந்த பனைவிதைகளுடன் அய்யன்குளம் ஏரிக்குச் சென்று ஊராட்சி மன்றத் தலைவர் ஜியாவுதீன், துணைத்தலைவர் கைலாசம், உறுப்பினர் அருள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில கரை ஓரங்களில் நடவு செய்தனர்.

சகோதரிகள் கூறும்போது, “இயற்கை மீது ஆர்வம் கொண்ட நாங்கள் மரங்கள் வளர்ப்பதை செய்து வருகிறோம். கஜா புயலில் எங்கள் பகுதியில் உள்ள மா,பலா, தென்னை, என ஒட்டுமொத்த மரங்களும் வேரோடு சாய்ந்தது. ஆனால் பனை மரங்கள் மட்டும் நிலைத்து நின்றது. அதனால் கரோனா விடுமுறை காலம் வீட்டில் அமர்ந்து பொழுது போக்குவதைவிட நிலத்தடி நீரை சேமித்து வறட்சி, புயலை தாங்கி வளரும்  பனை விதைகளை சேமிக்கலாம் என்று நினைத்தோம். சேகரிப்பை தொடங்கினோம். அதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட போது வரவேற்பு கிடைத்தது. பலரும் பனை விதை வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு பார்சல்கள் மூலம் அனுப்பி வருகிறோம். அதைபார்த்து மேலும் பலர் கேட்டுள்ளனர். சுதந்திர தினத்தில் மட்டும் நடவு செய்ய 3 ஆயிரம் விதைகள் கேட்டிருந்தனர் அனுப்பி வைத்தோம். மேலும் 11 ஆயிரம் விதைகள் வரை கேட்டுள்ளனர். அந்த விதைகளை சேகரித்து வருகிறோம். சேகரித்த விதைகளை அண்ணன் சிகா.லெனின் தான் பார்சல் செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி உதவி செய்கிறார்.

மேலும் எங்கள் செரியலூர் கிராமத்தில் பனை விதைகள் நடவு செய்ய ஆசைப்பட்டோம். அதே போல சுதந்திர தினத்தில் நடவு செய்திருக்கிறோம். தொடர்ந்து நடவு செய்வோம். இதே போல இந்த கரோனா காலத்தில் வீட்டில் இருக்கும் அனைவரும் தற்போது கிடைக்கும் பனை, வேம்பு, புங்கன் போன்ற பல்வேறு வகையான விதைகளை சேகரித்து குளம், ஏரி, சாலை ஓரங்கள், பொது இடங்களில் விதைத்துவிட்டால் இன்னும் சில வருடங்களில் நிறைய மரங்களை உருவாக்க முடியும். அப்போது தான் இயற்கையோடு நாம் வாழ முடியும்” என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

 81 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் சிவன்! களைகட்டும் மகா சிவராத்திரி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

தமிழ்நாட்டில் உயரமாக முழு உருவத்தில் எழுந்து நின்று தோற்றமளிக்கும் சிவன் சிலை புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலத்தில் உள்ளது. 81 அடி உயரத்தில் சிவனும் ஏழேகால் அடி உயரத்தில் தலைமைப் புலவர் நக்கீரரும் சிலையாக நிற்கும் கீரமங்கலம் நோக்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்களின் வருகை தொடங்கியுள்ளது.

கீரமங்கலத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் ஆலயம் உள்ளது. 800 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் முன்பு உள்ள தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்ட முழுஉருவ சிவன் சிலையும், சிவனிடம் உண்மைக்காக தர்க்கம் செய்த இடமாக கருதப்பட்டதால் தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழேகால் அடியில் கல்சிலையும் அமைத்து பழமையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் சிலைகள் திறப்பு மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதை லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு உயரமான சிவனைப் பார்க்க தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வரும் சிவ பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல மகாசிவராத்திரி நாளில் மகா சிவனைக் காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தில் கிரிவலம் சென்று, இரவு தங்கி இருந்து அதிகாலை செல்கின்றனர். இந்த வருடமும் அதிக பக்தர்கள் கூட்டம் வரலாம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வேன்! நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர் மன்றம்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.

இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். 

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.