ADVERTISEMENT

கடலூரில் 5000-ஐ தாண்டியது கரோனா!!! எம்.எல்.ஏ. குடும்பத்தில் மூவருக்கு தொற்று!

10:08 AM Aug 11, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4,779 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புவனகிரி சேர்ந்த பயிற்சி மருத்துவர், அரசு ஊழியர், சிதம்பரம் நகராட்சியை சேர்ந்த 3 மருத்துவர்கள், செவிலியர், மருந்தாளுநர் கடலூரை சேர்ந்த 2 மருத்துவர்கள், 2 ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள், நெய்வேலியை சேர்ந்த 2 செவிலியர்கள், கம்மாபுரத்தை சேர்ந்த 5 அரசு ஊழியர்கள், பரங்கிப்பேட்டையை சேர்ந்த மருத்துவர், அரசு ஊழியர் குமராட்சியை சேர்ந்த 5 மருத்துவர்கள், செவிலியர்கள், கடலூரை சேர்ந்த காவலர் உள்ளிட்ட 146 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நேற்று 18 மருத்துவர்கள், 5 செவிலியர்கள், 3 காவலர்கள் உள்ளிட்ட 287 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,066 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2,736 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயம் நேற்று வரை 65 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

நேற்று முன்தினம் உயிரிழந்தவர்களில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த திருவந்திபுரம் குறுவட்ட நில அளவையர் ஆக பணியாற்றி வந்த 45 வயது பெண் குறிப்பிடத்தக்கவர்.

இதனிடையே கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. கணேசனுக்கு கரோனா தொற்று கடந்த ஜூலை 16ம் தேதி உறுதியாகி, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பிய ஒருசில நாட்களில் அவரது மூத்த மகள் கவிதாலட்சுமி புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு கணேசன் எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கு கரோனோ பரிசோதனை எடுக்கப்பட்டது.

பரிசோதனையில் அவரது மனைவி, மகள், மருமகள் என மூவருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் மூவரும் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT