Skip to main content

கரோனா நோய் கண்டறியும் கருவி சோதனை ஓட்டம் - சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் தொற்று கண்டறியும் RT-PCR கருவியின் சோதனை ஓட்டத்தினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


அப்போது செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பேசுகையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இம்மருத்துவமனை கடலூர் மாவட்ட கரோனா மருத்துவமனையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

 

 

Corona Diagnostic Equipment Test Flow - Study by Assemblyman K.A.Bandian


இதுவரை கரோனா நோய் தொற்று கண்டறியும் வசதியானது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் உள்ளது. அதனால் முடிவுகள் வருவது 2 ல் இருந்து  மூன்று நாட்கள் ஆகின்றது. ஆதலால் இம்மருத்துவ மனைக்கு எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 32 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கரோனா நோய் கண்டறியும் RT-PCR வைரல் டெஸ்டிங் மெஷின் வாங்கிட நிதி ஒதுக்கப்பட்டு தற்போது இக்கருவியானது நிறுவப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்) அனுமதி சான்று கிடைத்தவுடன் சிதம்பரத்திலேயே நோய் தொற்று கண்டறியும் வசதி ஏற்படும். அதன் மூலம் டெஸ்ட் எடுக்கப்பட்டவுடன் குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரியவரும்.

தற்போது இக்கருவியின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றது. கரோனா நோய் கண்டறியும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள இரண்டு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ பணியாளர்கள் குழு சென்னையில் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா மாவட்ட மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட பின்பு மாவட்டம் முழுவதிலும் இருந்து இதுவரை 282 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 73 பேர் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 38 பேருக்கு நோய் தொற்று இல்லை என்றவுடன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

 

Corona Diagnostic Equipment Test Flow - Study by Assemblyman K.A.Bandian

 

20 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்பு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களில் 5 பேர் பூரண குணமடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து அவரவர்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் இவர்களும் குணமடைந்து வீடு திரும்புவார்கள். இம் மருத்துவமனையில் தற்போது முதல்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் கிடைக்கபட்டவுடன் விரைவில் வீடு திரும்புவார்கள் என்றார்.
 

க



ஆய்வின்போது அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கிருஷ்ணமோகன், துணைவேந்தரின் ஆலோசகர் மருத்துவர் சிதம்பரம், மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர்  சண்முகம், வட்டாட்சியர்கள் ஹரிதாஸ்,பலராமன், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன், உதவி காவல் ஆய்வாளர் கணபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.