Advertisment

சேலத்தில் 22 மையங்களில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்

Corona booster vaccination at 22 centers in Salem

சேலத்தில், கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஜன. 20) நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 22 மையங்களில் இம்முகாம் நடக்கிறது. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 15 வயதுக்கு மேற்பட்ட 25.70 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 16.68 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

Advertisment

மாவட்டம் முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 57 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை கரோனாதடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஜன. 10ம் தேதியன்று, பூஸ்டர் தடுப்பூசி முகாமை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில், அதே நாளில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த முகாமைத் தொடங்கி வைத்தார்.

Advertisment

சேலம் மாவட்டத்தில் 15025 சுகாதாரப் பணியாளர்களும், 18192 முன்களப் பணியாளர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 24807 பேர் என மொத்தம் 58024 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உள்ளவர்கள் எனக் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் அனைத்து ஒன்றியங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்பட 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், சேலம் அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனை என மொத்தம் 22 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஜன. 20) நடக்கிறது. பூஸ்டர் தடுப்பூசிக்கான முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்கள், ஏற்கனவே கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் நிறைவு செய்தவர்கள் மட்டும் இந்தச் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே கோவிஷீல்டு அல்லது கோவாக்ஸின் ஆகியவற்றில் என்ன வகை செலுத்தப்பட்டதோ அதே வகையிலான பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். தற்போது உருமாறிய கரோனா வைரஸான ஓமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதாலும், தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் பொதுமக்கள் உடனடியாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு, நோய்த்தொற்றின் தீவிரத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தைக் காண்பித்து பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe