Corona bed shortage at Rajiv Gandhi Hospital in Chennai ... Ambulance waiting crisis!

Advertisment

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 90 விழுக்காட்டிற்கும் மேலான படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனால், வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் பல இடங்களில் ஆம்புலன்சிலேயே காத்திருக்கின்றனர்.

சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை 5 அரசு மருத்துவமனைகள் உள்ளன. அந்த ஐந்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கான 4,368 படுக்கைகள் உள்ளது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளாயிருக்கக் கூடிய சூழ்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் நெருக்கடியான நேரத்தை தற்போது சந்தித்து வருகின்றனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக வரக்கூடிய கரோனா நோயாளிகளுக்கு உடனடியாக படுக்கைகள் கிடைக்காததால், ஆம்புலன்சிலேயே ஆக்சிஜன் பொருத்தப்பட்டபடி கிட்டத்தட்ட 5 மணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 150க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் வருகிறார்கள்.

Advertisment

அதனால் தான் அவர்களுக்கு அட்மிஷன் உடனடியாக கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு எந்த வகையான வசதிகள் கொண்ட படுக்கைகள் தேவை என்பது கண்டறியப்பட்டு, அதன்படி அவர்களைப் பிரித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்பாக ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகளுக்கு அதற்கான படுக்கைகளையும், ஆக்சிஜன் வசதி தேவைப்படாத நோயாளிகளுக்குத் தனியாக அதற்கான ஏற்பாடுகளையும் மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒரே நேரத்தில் வந்து இருப்பதால், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.