
கேரளாவில் கடந்த மாதம் 5000 பேர் கரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். கரோனாவின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாகக் குறையத் தொடங்கியிருக்கிறது. எனினும் நேற்றைய (09 மார்ச்) நிலவரப்படி கேரளாவில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,412 என்கிறார்கள். இதனிடையே கரோனா இரண்டாம் கட்ட அலையைத் தடுக்கும் வகையில், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர்த்து கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. மேலும், வருபவர்களுக்கு கரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதற்கேற்ப கேரளாவிலிருந்து தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அப்படி கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு தமிழக சோதனைச்சாவடி சுகாதாரப் பணியாளர்கள் கரோனா டெஸ்ட் எடுப்பதில்லை. அவர்களின் அலட்சியம் காரணமாக, மீண்டும் தமிழகத்திற்குள் கரோனா இரண்டாம் கட்ட அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்பு கரோனா தொற்றுப் பரவலிருந்தபோது புளியரை சோதனைச் சாவடியில் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கரோனா டெஸ்ட் பணியை நுணுக்கமாகக் கவனித்தனர்.

தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால், சோதனைச் சாவடியிலுள்ள சுகாதாரப் பணியாளர்கள் குறைக்கப்பட்டுவிட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட வேண்டிய தடுப்பு மருந்துகள் கூட வைக்கப்படவில்லையாம். தற்போதைய சூழ்நிலையில் புளியரை எல்லையில் டெஸ்ட் எடுக்கும் சுகாதாரத்துறையின் குழுவில் மூன்று பேர்கள், வருகிற வாகன எண்ணைப் பதிவு செய்ய நான்கு பேர்கள், வாகனங்களுக்கு மருந்து தெளிக்க ஒரு நபர் என எட்டுப் பேர்கள் வீதம், மூன்று ஷிஃப்ட்களுக்கு 24 பேர்கள் மட்டுமே பணியிலிருக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து சுகாதாரத்துறையின் பிற அதிகாரிகள் எல்லைப் பணியில் இல்லையாம். கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் பேருந்து மூலமாக வரும் அத்தனை பொது மக்களுக்கும் தற்போதைய குழுவினரைக் கொண்டு டெஸ்ட் எடுப்பது இயலாத காரியம்.
மேலும் தற்போது பணியிலிருக்கும் 40 பேர்களுக்கும் கடந்த சில மாதங்களாக ஊதியமே வழங்கப்படாத நிலையில் பணிபுரிந்து வருகின்றனராம். இதனால் கரோனா டெஸ்ட் எடுக்கும் பணியில் அலட்சியம் காட்டப்படுகின்றன. முழுமையாக எடுக்கப்படவில்லை. இதனால் மீண்டும் கரோனா பரவும் சூழல் ஏற்பட்டுவிடும் என அச்சத்தோடு தெரிவிக்கின்றனர் புளியரை பார்டர் பகுதி மக்கள். மாவட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.