
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் என்பது சுனாமி போல் விசுவரூபம் எடுத்து பரவும் என உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பறக்கை செட்டித்தெருவில் வரிசையாக 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என 300-க்கும் மேற்பட்டவா்கள் வசிக்கின்றனர். அங்கு ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மற்றவர்களுக்கும் சளி பரிசோதனை செய்ததில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த தெருவை வலை போட்டு யாரும் உள்ளேயும் வெளியேயும் போக முடியாத படி அடைத்துள்ளனர். அங்கிருந்த ரேஷன் கடையும் 10-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூஜை செய்ய பூசாரி மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய மாநகர் நல அலுவலர் விஜய்சந்திரன், “3 பேருக்கு மேல் ஒரு பகுதியில் தொற்று அதிகமாக இருந்தால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்க வேண்டும். இங்கு 19 பேருக்கு தொற்று இருப்பதால் அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த தெரு மக்கள், ரேஷன் கடை ஊழியர்கள், அங்கு வந்து சென்றவர்கள் என 156 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 3வது அலையில் தனிமைபடுத்தப்பட்டு சீல் வைக்கபட்ட முதல் பகுதி இது தான். அங்கு உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க மாநகராட்சியால் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதே போல் மாநகராட்சியின் பூங்காவில் ஒரு பகுதி வாடகை வாகனம் நிறுத்துமிடமாக உள்ளது. இதனால் பூங்காவுக்கு வருபவர்களும் வெளி நபர்களும் அங்கு தான் வாகனங்களை நிறுத்துவார்கள். இந்த நிலையில் அங்கு வந்த இருவருக்கு சளி பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தொற்று உறுதியானதால் பூங்காவும் அடைத்து சீல் வைக்கப்பட்டது.