ADVERTISEMENT

ஊரடங்கை சாதகமாக்கி வேட்டை நடத்தும் போலீசார்!!! நாகையில் பரபரப்பு!!!

04:51 PM Apr 24, 2020 | kalaimohan

கரோனா வைரஸ் விவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு அபாரமானதாக இருந்துவரும் நிலையில், நாகை மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள் சிலர் வழக்கம்போல் வசூல் வேட்டையில் ஈடுபட்டு, ஆதாரத்தோடு பணியிடை நீக்கத்திற்கு ஆளாகியிருப்பது போலீசார் வட்டாரத்தில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

ADVERTISEMENT


நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவப்பிரகாசம். இவருடைய சொந்த ஊர் ஜெயங்கொண்டம். இவர் நாகையில் பணிக்கு வந்ததிலிருந்து லஞ்சம் தலைவிரித்தாட துவங்கிவிட்டது. வெளிப்பாளையம் காவல்நிலையம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு எதிரே இருந்தும், காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, கள்ளசாராயம், காரைக்காலிலிருந்து பாட்டில்கள், மற்றும் பல சட்டவிரோத செயல்களும் கனஜோராகவே நடந்துவந்தது. இதற்கு வாரமுறையில் லஞ்சம் வாங்கி வந்திருக்கிறார் ஆய்வாளர் சிவப்பிரகாசம்.

ADVERTISEMENT

அதோடு வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் வரும் எந்த புகாராக இருந்தாலும் பணமில்லாமல் புகாரை தொட்டதே இல்லை என்றும், மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளை பிடித்து அதனை விற்றும் பணம் பார்த்துவிடுவார் என்கிறார்கள் அங்குள்ள சிலர்.

மேலும் நாகப்பட்டினத்திற்கு பணிக்கு வந்த காலத்திலிருந்து அவர் மீது எவ்வளவு புகார்கள் மேலிடத்திற்கு சென்றாலும் தன் மீது யாரும் நடவடிக்கை எடுக்காத படி, உயர் அதிகாரியின் மனைவி ஒருவருக்கு வாரம் ஒரு லட்சம் கொடுத்து தன்னை பாதுகாத்துக் கொள்வாராம்.



இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் வெளிப்பாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க, அதிரடியாக லஞ்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார். மளிகை கடைக்காரர்களோ, மிரட்டலோடு லஞ்சமாக பணம் பறித்ததையும் வீடியோ ஆதாரமாக்கி, கடந்த 20 ம் தேதி நாகை எஸ்பிக்கு புகாராக கொடுத்தனர். நேர்மையானவரகாவும், துணிவானவராகவும் செயல்பட்டுவரும் நாகை எஸ்பி செல்வ நாகரெத்தினம், ஆதாரங்களை உறுதி செய்துகொண்டு அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், ஆய்வாளர் சிவபிரகாசமோ எஸ்.பி உத்தரவையும் மதிக்காமல், ஆயுதபடைக்கும் செல்லாமல் நாகை அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி என கூறி உள்நோயாளியாக அட்மிட் ஆகிவிட்டார். இதனை அறிந்து கோபத்தின் உச்சத்திற்கே சென்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மீது தொடர்ந்து வந்த லஞ்ச புகார்களை வைத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய காவல் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

பின்னர் லஞ்சம் பெற்ற புகாருக்காகவும், உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்படாத காரணத்தாலும் ஆய்வாளர் சிவபிரகாசத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன். லஞ்சப் புகாரில் பலமுறை தப்பித்த ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்த நாகை மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரை வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த வாரம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் திருவென்காடு பகுதியில் உள்ள மளிகை கடைகளை மிரட்டி லஞ்சம் பெற்றதாக பெண் காவலர் ஆய்வாளர் ஸ்ரீபிரியா இதேபோன்று வீடியோ ஆதாரங்களோடு சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT