/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_120.jpg)
சேலத்தில், கூட்டுறவு சங்கம் தொடங்கி 58 கோடி ரூபாய் முதலீடுகளை திரட்டி மோசடி செய்த வழக்கில் பெண் நிர்வாகியை பொருளாதாரகுற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர், தனது உறவினர்கள் தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலத்தில் அமுதசுரபி கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனத்தைத் தொடங்கினார். குறுகிய காலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதன் கிளைகளையும் தொடங்கி நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடுசெய்தால், வங்கிகளைக் காட்டிலும் கூடுதல் வட்டி வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதை நம்பி ஏராளமான முதலீட்டாளர்கள் இந்த சங்கத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வுக்காலம் முடிவடைந்த பிறகும் அசல்மற்றும் வட்டியைத் தராமல் சங்க நிர்வாகிகள் இழுத்தடித்து வந்தனர். முதலீட்டாளர்களிடம் இருந்து நெருக்கடி அதிகரிக்கவே, ஒரு கட்டத்தில்அவர்கள் சங்கத்தை இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் (52) என்பவர் அமுதசுரபி நிறுவனத்தில் தான் முதலீடு செய்த 2.92 லட்சம்ரூபாயை ஏமாற்றிவிட்டதாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அவரைப் போல ஆயிரத்துக்கும் மேற்பட்டமுதலீட்டாளர்கள் அமுதசுரபி சங்கத்தின் மீது புகார் அளித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அமுதசுரபி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து58 கோடி ரூபாய் வரை வசூலித்து கம்பி நீட்டிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து சங்க நிர்வாகிகள் ஜெயவேல், பிரேம் ஆனந்த், தங்கபழம், சரண்யா, கணக்காளர் கண்ணன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இவர்களில் சங்கத் தலைவர் ஜெயவேல், கணக்காளர் கண்ணன், இயக்குநர்கள் தங்கபழம், சரண்யா (41) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடைசியாக கைது செய்யப்பட்ட சரண்யாவை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டுஅவரை கோவை பெண்கள் சிறையில்அடைத்தனர். தற்போது அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து டான்பிட் நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த டான்பிட் நீதிமன்றம், சரண்யாவை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து உடனடியாகஅவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர். முதலீட்டாளர்களிடம் சுருட்டிய பணத்தில் எங்கெங்கு சொத்துகளை வாங்கியுள்ளனர்? மொத்தம் எத்தனை பேரிடம் முதலீடுகள்பெறப்பட்டுள்ளன?இதன் பின்னணியில் அரசியல் தொடர்பு உள்ளதா? பினாமிகள் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனரா? என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சரண்யாவிடம் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரை புதன்கிழமை (ஜூலை 05) டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டுகோவை பெண்கள் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)